தகுதியான நிறுவனத்திடம் ஏர்போர்ட்டை கொடுங்கள்: பிரதமரிடம் குறைகளை பட்டியலிட்டார் முதல்வர்
சென்னை: 'சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம், நிர்வாகம் மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் வைத்து, அதை தகுதியான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்' என, முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின், சேவை குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதை தகுதியான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் விஜய், சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முக்கிய சர்வதேச நுழைவு வாயில்களில் ஒன்றாக, சென்னை இருந்தபோதும், சர்வதேச தரத்திற்கும், பயணியரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற வகையில் இல்லாமல், சென்னை சர்வதேச விமான நிலையம் பின்தங்கியுள்ளது.
தற்போது கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தகவலின்படி, 2026 ஏப்ரலில் பயணியர் போக்குவரத்தில், சென்னை விமான நிலையம் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, கொல்கட்டாவிற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் பயணியர் கையாளும் திறன், ஆண்டிற்கு 2.7 கோடி பயணிகள். தற்போது நடந்து வரும் விரிவாக்க பணிகள் நிறைவடையும்போது 3.5 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025 - 26ஆண்டு அறிக்கைபடி, சென்னை விமான நிலையம் 2.31 கோடி பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது.
சென்னையில் சரக்கு விமானங்களின் இயக்கம், 6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், பெங்களூரு 14.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஒரு மணி நேரத்திற்கு 36 விமானங்களை இயக்கும் திறன் உள்ளது. ஆனால், செயல்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
தினசரி 320 உள்நாட்டு விமானங்கள் மற்றும் 115 சர்வதேச விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. விமான நிலையம் அதன் முழு செயல்பாட்டு திறனை எட்டவில்லை.
சென்னையின் முக்கியத்துவதை பிரதிபலிக்கும் வகையில், விமான நிலைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.
அதற்காக, விமான நிலையத்தை நவீன முறையில் திறம்பட நிர்வகிக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, பங்களிக்கும் வகையில், விமான நிலையம் இருக்க வேண்டும்.
இதற்காக, இந்திய விமான நிலைய ஆணையத்தை தவிர்த்து, தகுதியான நிறுவனத்திடம், சென்னை விமான நிலையத்தை, விரைந்து ஒப்படைக்க வேண்டும். இந்த கோரிக்கைக்கு, பிரதமர் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.