📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 08:00 PM

தமிழக அமைச்சரவை செப்டம்பர் இறுதிக்குள் பெரும் மாற்றம்

தமிழக அமைச்சரவை செப்டம்பர் இறுதிக்குள் பெரும் மாற்றம்

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது அமைச்சரவையில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 2026ல் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், இப்போது இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அமைச்சரவையில் தற்சமயம் 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நான்கு அமைச்சர்கள்.

தவெக ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதங்கள் ஆகும் நிலையில், அமைச்சர்கள் தங்கள் துறையில் செயல்பட்ட விதம், துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்கள், சொந்தத் தொகுதியில் மேற்கொண்ட பணிகள், சட்டமன்றச் செயல்பாடு, த.வெ.க.வினரிடம் நடந்துகொண்ட விதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முதல் அமைச்சர் விஜய்யின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அறிக்கை அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை, துறை செயலாளர்களை அழைத்து முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யும் உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிவடையும் நிலையில், அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், த.வெ.க.வில் ஒரு பெண் அமைச்சர் உள்பட 3 பேர் மாற்றப்பட இருப்பதாக தெரிகிறது.

இதேபோல், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவருக்கு துறை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேலும், த.வெ.க. அமைச்சர்களில் நால்வரில் ஒருவர், தனக்கு பெரிய துறை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், அவர்களுக்குத் துறை மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின் முதல்வர் விஜய் வருகிற 10ஆம் தேதி பிரிட்டன் செல்கிறார். பிரிட்டனில் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

பிரிட்டிஷ் பயணத்தை முடித்துவிட்டு 16ஆம் தேதிதான் முதல்வர் விஜய் தமிழ்நாடு திரும்புவார் என்று கூறுப்படுகிறது. முதல்வர் வெளிநாடு பயணம் முடித்து வந்தவுடன் தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.