‘தமிழ்நாட்டை கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்’
தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வென்றுள்ளநிலையில், இந்த வெற்றி தற்காலிகமானதுதான் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற வரிகளுக்கு ஏற்ப, இன்று தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகளால் கேள்விக்குறியாகியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தாராளமான தனியார்மயமாக்கல், கொத்துக் கொத்தாக நடைபெறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் எனத் தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் ஜெயலலிதாவின் தொண்டர்களால் வீழ்த்தப்பட்டு தமிழகத்தின் பொற்காலமான ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.