தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை
தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் தொடர்பான தேர்தல் மனுக்கள்மீது நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் வரை அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதித்த தடையை செப்டம்பர் 8 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமே இந்த மனு மீதான இறுதி விசாரணையை நடத்த முடிவு செய்துள்ள நீதிபதிகள், அதற்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது அனைத்து வாதங்களையும் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வழக்கு என்ன?
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த மொத்தம் 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே மற்ற மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இச்சூழலில், ராஜினாமா செய்தவர்கள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் மற்றொரு வேட்பாளரை வெற்றிப் பெற்றவராக அறிவிக்கவும் கோரப்பட்டுள்ளது.
இதனால் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய நபர் வென்றால், அதே நேரத்தில் பழைய தேர்தல் வழக்கின் தீர்ப்பில் “தோற்ற மாற்று வேட்பாளர் தான் உண்மையான வெற்றியாளர்” என நீதிமன்றம் அறிவித்தால், ஒரே தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் உரிமை கோரும் கடுமையான சட்ட சிக்கல் உருவாகும்.
சட்டப்பிரிவு 151ன்படி தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த இயலாது என திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுதாரரின் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இடைத்தேர்தல் நடத்துவது மாநில அரசு கருவூலத்தைப் பாதிக்கும் என்றும், ஜனநாயக செயல்முறையையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டு ஜூலை.10ம் தேதியன்று ஜூலை.31 வரை மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்தது.
பின்னர் அந்த இடைக்கால தடை உத்தரவு ஆக.24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், செப்.8 அன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.