‘லட்சக்கணக்கான மக்களின் தவறால் கோடிக்கணக்கானோர் இன்று துன்புறுகின்றனர்’
சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்.,
வீட்டுக்கு வீடு பட்டதாரிகள், மருத்துவர்கள்
“ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் பார்த்தால், அத்தி பூத்தாற்போலதான் ஒரு மருத்துவரோ அல்லது பட்டதாரியோ இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக்காரணம் 'திராவிட இயக்கம்' என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக, திராவிட முன்னேற்றக் கழகப் பரம்பரைக் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிலை வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும்.
மாற்றம் அல்ல ஏமாற்றம்
அவர்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் ஆ.ராசா சொன்னதுபோன்று, ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
எனவே, இந்த நிலை மாறுவதற்கு இந்த மணவிழாவில் கலந்துகொண்டிருக்கக்கூடிய நீங்கள் வரக்கூடிய காலகட்டங்களில் சிறப்பான வகையிலே சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு நான் அதிகமாக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு நான் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள்: நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்.
எப்படி தலைவர் கலைஞர் தன்னுடைய குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாப் பேத்திகளுக்கும் தமிழ் பெயரைச் சூட்டியிருக்கிறார்களோ, அதேபோன்று நம்முடைய அமிர்தம் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழாவில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்வது, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு,
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக” மணமக்கள் வாழ்க, வாழ்க, வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.” எனப் பேசினார்.