📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 04:30 PM

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும்

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும்

தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு, பல்கலைக்கழக விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மாநிலத்தின் கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை தொடக்கத்திலும், இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படவும் வழிவகை செய்யுமாறு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், தொல் திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெளிவான மற்றும் முன்கூட்டிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

2021ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநில கீதமாக இப்பாடலே இருந்து வருவதாகவும், 5 தசாப்தங்களுக்கும் மேலாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இந்த பாடலே முதலில் இசைக்கப்பட்டு வருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது கூட, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்ததை எம்.பி.க்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது தமிழ் மக்களையும், அந்தப் பல்கலைக்கழகம் யாருடைய பெயரால் அமைந்துள்ளதோ, அந்தப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையையும் அவமதிப்பது போல் உள்ளதாகப் பலரும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு நிறுவனங்கள் “கண்ணியத்துடனும், சர்ச்சைகள் இன்றியும்” தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக, தாங்கள் இந்தக் கோரிக்கையை ஒரு புகாராக அல்ல, மாறாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடிதத்திற்கான காரணம் என்ன?

முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே இந்த சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது.

இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இணைந்து இந்தக் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு எழுதியுள்ளனர்.