TN Budget 2026
தமிழ்நாடு பட்ஜெட்டில், ஏஐ மற்றும் ஆழ்நுட்ப வளர்ச்சிகாக, 'அறிவகம்' எனும் பெயரில் இந்தியாவின் முதல் 'ஏஐ மற்றும் புதுமையாக்க நகரம்' அமைக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கான மொழி மாதிரியை உருவாக்குவது, மாணவர்களுக்கு ஏஐ பயிற்சி அளிப்பது, வேகமான கட்டிட அனுமதிக்கான ஸ்பீடு திட்டம், அரசு அலுவலகங்களில் ஏஐ சேவைகள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு ஏஐ சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த 2026-27 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏஐ தொடர்பாக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் வருமாறு:
எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிலுட்ப புதுமையாக்கத்திற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்பதை உணர்ந்து அரசு, டிஜிட்டல் மாற்றத்தின் முன்னணியில் தமிழகத்தை நிறுத்த உறுதி கொண்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தின் பலனை இளைஞர்கள் முதன்மையாக பெறுவதை உறுதி செய்ய ’ஏஐ தொழில் வளர்ச்சி திட்டம்’ (AI Industry Development Program) அறிவிக்கப்படுகிறது. இதன் கீழ், உயர் கல்வி நிலைகளுக்கு ஏற்ற சிறப்பு ஏஐ பாடதிட்டத்தினை கல்வியாளர்கள், தொழில்துறை வல்லுனர்கள் அடங்கிய குழு உருவாக்கும். நவீன பயிற்சி வசதிகள் மற்றும் ஐஐடி போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களுடான கூட்டு மூலம், 2031ம் ஆண்டு வாக்கில், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் உள்ளிட்டவற்றின் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவர்கள் எதிர்காலத்திற்கு தயாரான பணியாளர்களாக இருப்பார்கள்.
பள்ளிகளில் ஏஐ பயிற்சி
ஏஐ, ரோபோடிக்ஸ் மற்றும் இதர வளரும் நுட்பங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் 'டிஎன் ஸ்பார்க் திட்டம்' (ஏஐ, ரோபோடிக்ஸ் மற்றும் ஆன்லைன் கருவிகள் ஆற்றலுக்கான தமிழ்நாடு பள்ளி திட்டம்), எதிர்காலத்திற்கு ஏற்ற பணியாளர் தலைமுறையை உருவாக்கும் நோக்கத்திற்கு ஏற்ப விரிவாக்கப்படும். தற்போதைய 2600 பள்ளிகளில் இருந்து 5000 பள்ளிகளுக்கு திட்டம் விரிவாக்கப்படும்.
புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள மூன்று அடுக்கு முறையில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் புதிய நுட்பங்களின் அடிப்படைகள் கற்றுத்தரப்படும். 9 மற்றும் 10 ம் வகுப்பில் இடைநிலை பயிற்சி மற்றும் 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் சிறப்பு பாடத்திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் மத்தியில் புதுமையாக்கத்தை இது ஊக்குவிக்கும்.
மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே உள்ள திட்டத்தின் கீழ் வராத நவீன ஏஐ சார்ந்த உதவி கருவிகளை வாங்க 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.30,000 வழங்கப்படும்.
முதலீட்டாளர்கள் மாநிலத்தின் ஆழமான முதலீடு சூழலை புரிந்து கொள்ள மாநிலத்தின் உற்பத்தி மற்றும் விநியோக ஆற்றலை விரிவாக பட்டியலிடும் டிஜிட்டல் மேடை உருவாக்கப்படும்.
தமிழகத்தின் தொழில்துறை போட்டித்தன்மையை மேம்படுத்த ஏஐ சார்ந்து இயங்கும் முதலீடு சேவை அமைப்பு கெய்டன்ஸ் 3.0 உருவாக்கப்படும். தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு அனைத்து தகவல்கள், சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும். அனைத்து அனுமதி, தடையில்லா சான்றிதழ்களை வழங்கும் மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளம் 3.0 அறிமுகம் செய்யப்படும்.
ஏஐ மற்றும் ஆழ்நுட்ப வளர்ச்சிகாக, அறிவகம் எனும் பெயரில் இந்தியாவின் முதல் ஏஐ மற்றும் புதுமையாக்க நகரம் அமைக்கப்படும். ஏஐ பல்கலைக்கழகம், திறன் வளர்ச்சி மையம், செமிகண்டக்டர் சோதனை வசதி, புதுமையாக்க அடைகாக்கும் மையங்கள் ஆகியவற்றை இந்த நகரம் கொண்டிருக்கும். ஏஐ நிறுவனங்கள், ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்கள், குவாண்டம் நுட்ப மையங்கள், அரசு ஏஐ திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றாக கொண்டு வரும் சூழலாக இது அமையும். இந்த திட்டத்திற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வதற்கான ஆய்வு ரூ,.5 கோடியில் மேற்கொள்ளப்படும்.
ஐடி துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். ஏஐ என்பது இன்னும் எதிர்கால நுட்பமாக இல்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஆற்றலாக அமைகிறது. அரசு நிர்வாகத்தை மேலும் திறந்த தன்மை கொண்டதாக, அனைவருக்குமானதாக, அணுகல் தன்மை கொண்டதாக அரசு ஏஐ சேவைகளை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த உறுதி கொண்டுள்ளது. ஏஐ, குவாண்டம் நுட்பம், அனிமேஷன் உள்ளிட்ட வளரும் நுட்பங்களை உள்ளடக்கிய வகையில் 'தமிழ்நாடு ஏஐ மிஷன் திட்டம்' வலுவாக்கப்படும். இந்த பட்ஜெட்டில் ஏஐ, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ.398 கோடி ஒதுக்கப்படுகிறது.
வீட்டு மனைகள் மற்றும் கட்டிட அனுமதிகளை வேகமாக வழங்குவதற்காக ஏஐ திறன் கொண்ட ஆன்லைன் அனுமதி திட்டம் 'ஸ்பீடு' அறிமுகம் செய்யப்படும். சிஎம்டிஏ உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த திட்டம் செயல்படும். இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி மாநிலத்தின் நகர்புறங்களில் நிகழ உள்ளது. இதற்காக, நகர்புற உள்கட்டமைப்பில், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், நகர்புற போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சமூக உள்கட்டமைப்பு, ஏஐ சார்ந்த மின் ஆளுகை, ஆகியவற்றை ஒருங்கிணைந்த ’முதல்வர் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம்’ அறிமுகம் செய்யப்படும். 2031 வாக்கில் மாநிலத்தின் நகர்புற கட்டமைப்பு, நகரங்கள் செயல்பாட்டை இது மாற்றி அமைக்கும். இத்திட்டத்திற்காக ரூ.2117 கோடி இந்த நிதியாண்டு ஒதுக்கப்படும்.
வேக கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காக ஏஐ பயன்பாடு சார்ந்த பாதுகாப்பான சாலைகள் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு பணிகளில் பொறுப்பேற்கும் தன்மையை உறுதி செய்ய, கோப்புகள் செயல்பாட்டை ஏஐ திறன் கொண்ட தர உறுதி தணிக்கை வாரியம் கண்காணித்து தேவையில்லாமல் கோப்புகள் தேங்குவதை தவிர்த்து முடிவெடுத்தலை வேகமாக்கும்.
ஏஐ, ஏஜெண்டிக் ஏஐ மற்றும் பேசாக்க வசதி போன்றவை மூலம் அரசு உழியர்கள் வழக்கமான பணிகளுக்கான செயல்பாடு தானியங்கி மயமாக்கப்படும்.
தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் எல்.எல்.எம் உருவாக்கப்படும். இந்த ஏஐ சார்ந்த மொழி மாதிரி கருவிகள் அரசு தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும். முன்னணி பல்கலைக்கழங்களுடன் இணைந்து தமிழுக்கான ஏஐ மாதிரி உருவாக்கப்படும்.