தங்கம் விலை திடீரென ஏன் இப்படி உயருது?
நகை வாங்குவோருக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சுப காரியங்களுக்கான தேவைகள் மற்றும் திட்டமிட்ட நகைக் கொள்முதலுக்கு இதுவே ஏற்ற சூழலாகப் பார்க்கப்படுகிறது.
தங்கம்... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொடுகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனையானது.
இதனிடையே, நேற்று காலை விலையில் மாற்றமின்றி விற்பனையான தங்கம், மாலையில் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று காலையும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 720-க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கம் கடந்த 7 தினங்களில் ரூ.6,000 அளவில் அதிகரித்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சத்தை நெருங்கிவிட்டது.
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.14 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் சற்று தணிந்துள்ளதும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.