தொடக்கநிலை ஆறில் பயிலும் மாணவர்களுக்கு இலவச காலை உணவுப் பொட்டலங்கள்
தொடக்கநிலை ஆறில் பயிலும் கிட்டத்தட்ட 12,000 மாணவர்கள் சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய அங்காடிகளிலிருந்து காலை உணவுப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் அந்தப் பொட்டலத்தில் ஆப்பிள், சிக்கன் எஸ்ஸென்ஸ், ஓட்ஸ் பால் என $25க்கும் மேற்பட்ட மதிப்புடைய உணவுப் பொருள்கள் உள்ளன.
மூன்றாவது ஆண்டாக ‘சியர்ஸ் பிரெக்ஃபஸ்ட் கிளப்’ என்ற திட்டத்தை ஃபேர்பிரைஸ் குழுமம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) அறிவித்தது.
தொடக்கநிலை இறுதியாண்டு தேர்வுக்குத் (பிஎஸ்எல்இ) தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள், செப்டம்பர் 3ஆம் தேதி பிற்பகல் 1 மணியிலிருந்து 51 சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் அங்காடிகளிலிருந்து அந்தக் காலை உணவுப் பொட்டலங்களைப் பெறலாம்.
செப்டம்பர் 4ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதிவரை, அங்காடிகளின் செயல்பாட்டு நேரத்திற்குள் பொட்டலங்களை மாணவர்கள் வாங்கிச் செல்லலாம். இருப்பு இருக்கும்வரை முதலில் வருவோருக்குப் பொட்டலங்கள் வழங்கப்படும்.
தொடக்கநிலை ஆறில் பயிலும் மாணவர்களோ அவர்களின் பெற்றோரோ பொட்டலங்களை நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் மாணவரின் அட்டையையோ பிஎஸ்எல்இ தேர்வுக்கான மின்சீட்டையோ காண்பிக்கவேண்டும்.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பொட்டலம் மட்டுமே வழங்கப்படும்.
கல்வியமைச்சின் தரவுகள்படித் தொடக்கநிலை ஆறில் பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினருக்கு 12,000 பொட்டலங்கள் வழங்கப்படுவதாக ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்தது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இதற்கிடையே, சீன மேம்பாட்டு உதவி மன்றம், யுரேஷிய மன்றம், யாயாசான் மெண்டாக்கி, சிண்டா ஆகிய சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தொடக்கநிலை ஆறில் பயிலும் மாணவர்களுக்கென 2,600க்கும் அதிகமான காலை உணவுப் பொட்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விடாமுயற்சியுடன் செயல்பட சமூகம் உற்சாகப்படுத்துகிறது என்பதை பிஎஸ்எல்இ தேர்வு எழுதும் மாணவர்கள் உணரவேண்டும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டு குழுமம் இதேபோன்ற காலை உணவுப் பொட்டலங்களை வழங்கியபோது இரண்டு நாள்களுக்குள் 12,000 பொட்டலங்கள் வழங்கப்பட்டன.