📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 12, 2026 01:03 AM

தொடர்ந்து அவையை முடக்கும் எதிர்க்கட்சிகள்; லோக்சபாவில் மேலும் 2 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றம்

தொடர்ந்து அவையை முடக்கும் எதிர்க்கட்சிகள்; லோக்சபாவில் மேலும் 2 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றம்

புதுடில்லி: தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால், லோக்சபாவில் இன்று (ஆகஸ்ட் 11) மேலும் 2 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லோக்சபாவில் அலுவல் நேரங்கள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும், கூடும் போது விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப் படுகின்றன.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 11) மேலும் இரண்டு மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டு உள்ளன. மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026 எந்தவித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதர் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026-ஐ முன்மொழிந்தார். தொடர்ந்து நிலவிய அமளிக்கு மத்தியிலும் அந்த மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் இதுவரை நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களில், இரண்டு மீது மட்டுமே விவாதம் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள சட்டங்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி தொடர்ந்ததால், லோக்சபா நாளை (ஆகஸ்ட் 12)காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்ந்து நடந்து வருகிறது. அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீண்டும் கூடி நடந்து வருகிறது.

பார்லிமென்ட்டில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு மணி நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. எந்தவொரு விவாதத்தையும் நடத்தவிட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. இதனால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதிலும், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டதால், ஏற்பட்ட நிதியிழப்பும், ஜனநாயக பின்னடைவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தொகுதி பிரச்னைகளையும், நாட்டின் முக்கிய விவகாரங்களையும் எம்.பி.,க்களால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை. இரு சபைகளும் முடங்குவதால் ஒருபுறம் மக்களின் வரிப் பணம் வீணாவதுடன், மறுபுறம் மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத சூழலும் ஏற்படுகிறது.