📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 26, 2026 05:03 PM

துலீப் கோப்பை 2026: முஷீர் கான் பேட்டிங் வீண்.. பட்டையை கிளப்பிய காஷ்மீர் ஸ்பின்னர்

துலீப் கோப்பை 2026: முஷீர் கான் பேட்டிங் வீண்.. பட்டையை கிளப்பிய காஷ்மீர் ஸ்பின்னர்

துலீப் கோப்பை 2026: முஷீர் கான் பேட்டிங் வீண்.. பட்டையை கிளப்பிய காஷ்மீர் ஸ்பின்னர்

பெங்களூரு: துலீப் கோப்பை கால் இறுதிப் போட்டியில் மேற்கு மண்டல அணிக்கு எதிராக 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வடக்கு மண்டல அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேற்கு மண்டல அணியின் இளம் வீரர் முஷீர் கான் குவித்த 96 ரன்கள் அடித்தும் தோல்வியால் வீணானது.

போட்டியின் இறுதி நாளில் வெற்றி பெற 287 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் களம் கண்ட மேற்கு மண்டல அணி, ஆட்டத்தின் இறுதி நாளை 7 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற நிலையுடன் தொடங்கியது. களத்தில் ஊர்வில் படேல் 25 ரன்கள் மற்றும் தனுஷ் கோட்டியான் 0 ரன்களுடன் ஆகியோர் இருந்தனர்.

ஆனால், வடக்கு மண்டல அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான அபித் முஷ்டாக் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால், வெறும் 6.3 ஓவர்களில் மேற்கு மண்டலத்தின் எஞ்சிய விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதி நாளில் கூடுதலாக 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மேற்கு மண்டலம் 57.3 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

வடக்கு மண்டலத்தின் அபித் முஷ்டாக் 22 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 99 ரன்கள் மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதற்காக 29 வயதான அபித் முஷ்டாக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான நிஷாந்த் சிந்து, நிதானமாக விளையாடிய ஊர்வில் படேலின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இப்போட்டியின் மிக முக்கிய திருப்புமுனையாக மேற்கு மண்டல அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ரன் அவுட் அமைந்தது. அவர் 70 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். முஷீர் கானுடன் இணைந்து அவர் அமைத்த 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மேற்கு மண்டலத்தின் பக்கம் திருப்பியது. ஒரு கட்டத்தில் 195 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெறும் நிலையில் மேற்கு மண்டலம் இருந்தது.

ஆனால், கெய்க்வாட் மற்றும் முஷீர் கான் உட்பட 4 முக்கிய விக்கெட்டுகளை 25 ரன்கள் இடைவெளியில் இழந்தது அந்த அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.ஆகஸ்ட் 30 முதல் தொடங்கவுள்ள அரையிறுதிப் போட்டிகளில், வடக்கு மண்டல அணி தெற்கு மண்டல அணியையும், மற்றொரு அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி மத்திய மண்டல அணியையும் எதிர்கொள்ள உள்ளன.