துரோகிகளுக்கும், துணை போனவர்களுக்கும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: மதுராந்தகம் வாக்காளர்களுக்கு பழனிசாமி அழைப்பு
மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.
மதுராந்தகம்: அதிமுக தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் உழைப்பால் வெற்றி பெற்றுவிட்டு, பதவி ஆசைக்காகவும், பெட்டி வாங்கிக் கொண்டும் மாற்றுக்கட்சிக்குத் தாவிய துரோகிகளுக்கும், அவர்களுக்குத் துணை போனவர்களுக்கும் இந்த இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பழனிசாமி பேசியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றும் விரும்பி தொண்டர்களும், கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக உழைத்தனர்.
மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தனர். ஆனால், வாக்களித்த மக்களைப் பற்றியோ, தங்களுக்காக உழைத்த கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் உழைப்பைப் பற்றியோ சிந்திக்காமல், குதிரைப் பேரத்தின் மூலம் பெட்டி வாங்கிக்கொண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சிக்குச் சென்றுள்ளனர். இதனால் மக்கள் விரும்பாத இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்சியில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினரை விலைக்கு வாங்கி, தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு, அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வேட்பாளர் அறிமுகம் செய்வதும், வீரவசனம் பேசுவதும் எந்த வகையில் நியாயம். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு முயன்றது.
நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைக்கு வந்தபோதெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் மூலம் தொடர்ந்து வாய்தா கேட்டு வழக்குகளை நீட்டித்தனர். இறுதியில் நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்.
துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.
பிரச்சாரத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.