தவெக கூட்டணி பெயர் செப்டம்பர் 9ல் அறிவிப்பு: மாணிக்கம் தாகூர்
சென்னை: தமிழக வெற்றிக் கழக ஆதரவுக் கட்சிகள் கூட்டத்தில் அக்கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாகத் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் செப்டம்பர் 9ஆம் தேதி அக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரு மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “தேசிய அளவிலும் மாநில அளவிலும் சமயச் சார்பற்ற சமூக நீதியைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அதனைத் தெளிவாக எடுத்துச் செல்வோம்,” என்று அவர் சொன்னார்.
மேலும், தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் விஜய்யும் அமைச்சர்களும் தெளிவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் வேட்பாளர் சர்ச்சை முடிந்துபோன கதை என்றும் சில பத்திரிகைக் குழுமங்கள் சமயச் சார்பற்ற கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தப் பாடுபடுவதாகவும் அவர் சாடினார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அவர், ராகுல் காந்தியே விஜய்யை பிரதமர் ஆக்குவார் என்ற தவெக எம்எல்ஏ கனிமொழியின் கூற்றுக்கு பதிலளித்தார்.
சோதிடர்கள் பேசுவதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும் அது தனிப்பட்ட ஒருவரின் கருத்து என தவெக பொருளாளரே கூறிவிடார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சட்டக் கல்வியில் பட்டம் பெற்றுள்ள தவெக எம்எல்ஏ கனிமொழி சோதிடராகவும் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.