📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 05, 2026 05:04 PM

பாடங்களுக்கு மதிப்பெண் தர ஆசிரியர்களுக்கு உதவும் ‘ஏஐ’ தளம்

பாடங்களுக்கு மதிப்பெண் தர ஆசிரியர்களுக்கு உதவும் ‘ஏஐ’ தளம்

உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த புவியியல் ஆசிரியர்கள், எழுத்து வடிவில் மாணவர்கள் சமர்ப்பிக்கும் பாடங்களைத் திருத்தி, மதிப்பெண் தர புதிய செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தளம் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

மார்க்லி (Markly) என்றழைக்கப்படும் அத்தளம் இப்போது சில உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், சமூகப் பாடங்கள், வரலாறு ஆகியவற்றுக்கும் சோதிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆசிரியர்களிடமிருந்தும் பள்ளிகளிடமிருந்தும் கருத்து கேட்டுவருவதாக கல்வி அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறியது. சோதனைகளில் தெரியவரும் விவரங்களை ஆராய்ந்த பிறகே மார்க்லி எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்படும் என்பன குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

மார்க்லி கைகொடுக்கும் விதம்

மார்க்லி, மாணவர்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைகளுக்கும் நீளமான பதில்களுக்குமான கருத்துகளை வெளியிடும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. அதனால் ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் அந்தந்த மாணவரின் தேவைகளில் கவனம் செலுத்தலாம் என்றும் அது சொன்னது.

மார்க்லிக்கான யோசனையைக் கல்வி அமைச்சு சென்ற ஆண்டு கொண்டுவந்தது. மாணவர்கள் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கும் பாட பதில்களுக்கு ஆக்ககரமான கருத்துகளைத் தெரிவிக்க ஆசிரியர்களுக்குக் கைகொடுக்கும் முயற்சிகளை அமைச்சு எடுத்துவருகிறது. அதன் அங்கமாக மார்க்லி தளத்தை உருவாக்கும் திட்டம் இடம்பெறுகிறது.

“மாணவர்களுக்குக் கருத்துகளை வெளியிடுவதற்கு முன்பு மார்க்லியின் பரிந்துரைகளை ஆசிரியர்கள் பரிசீலிக்கலாம், மாற்றிக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். மாணவர்களிடம் வழங்கப்படும் எல்லா கருத்துகளுக்கும் ஆசிரியர்களே பொறுப்பு வகிக்கின்றனர்,” என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சோதனையில் ஈடுபட்ட ஆசிரியரின் கருத்து

மார்க்லி சோதனையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் ஒருவரான கேன்பெரா உயர்நிலைப் பள்ளியின் ஆங்கிலப் பாடத்துறைக்குத் தலைமைதாங்கும் ஆசிரியர் கஸாலி அப்துல் வஹாப், 52, கல்வி ஆண்டின் ஒரு பகுதியில் மாணவர்களுக்குப் பலமுறை கருத்துகளைத் தெரியப்படுத்த மார்க்லி உதவுவதாகக் கூறுகிறார். அதேவேளை, மார்க்லியைப் பயன்படுத்தும்போது ஆசிரியர் தேவைப்படமாட்டார் என்ற நிலை கிடையாது என்பதையும் அவர் சுட்டினார்.

பயன்படுத்துவதற்கு முன்பு அதற்குத் தாம் ‘பயிற்சி’ அளிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மின்னிலக்கத் தளங்களின்மீது தமக்கு அதிக ஆர்வம் இருந்தாலும் அவற்றால் மனித ஆசிரியரின் இடத்தை நிரப்ப முடியாது என்றும் திரு கஸாலி சொன்னார்.