TOXIC: விமர்சனம்
கன்னடத்தில் பெரும்பாலும் ரீமேக் அல்லது சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த யஷ், ‘கேஜிஎஃப்’ பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக மாறினார். ‘ராக்கி பாய்’ என்ற பெயர் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பிரபலமானது.
‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு அவரது படத் தேர்வு எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அப்படியான சூழலில் யஷ் நடிக்கும் அடுத்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்ற அறிவிப்பே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
காரணம், முற்றிலும் கமர்ஷியல் வாடையே இல்லாத ஒரு பாதையில் பயணிக்கும் ஒருவர், யஷ் போன்ற ஒரு பான் இந்தியா நடிகரை வைத்து எந்த மாதிரியான படத்தை தரப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. படத்தின் டீசர், ட்ரெய்லர் கிளப்பிய விவாதங்கள், சர்ச்சைகள் ஆகியவற்றை தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
1947-ஆம் ஆண்டு, போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் கதை தொடங்குகிறது. அங்கு போதைப்பொருள் தொழிலின் முடிசூடா மன்னனாக சல்வடோர் என்ற பெரும்புள்ளி வலம் வருகிறார். கங்கா (நயன்தாரா) மற்றும் ராயா (யஷ்) இருவரும் அனாதைகளாக வளர்ந்த உடன்பிறப்புகள். சகோதரி மீது அதிக பாசம் வைத்துள்ள ராயா, சல்வடோரின் கும்பலில் ஒரு முக்கிய உறுப்பினராக உருவெடுக்கிறார்.
அவரது மகள் ரெபெக்காவைத் (தாரா சுதாரியா) திருமணம் செய்யக்கூடிய சூழலில், ராயாவின் வாழ்க்கையில் நாடியா (கியாரா அத்வானி) நுழைகிறார். அவரது ஈர்ப்பில் விழும் ராயா, ரெபெக்காவை விட்டுவிட்டு நாடியாவுடன் சுற்றுவதை சல்வடோரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ரெபெக்காவும் ராயாவை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஒருவரை அடைய வேண்டுமென்றால் மற்றொருவரை இழக்க வேண்டும் என்ற நிலை வரும்போது ராயா என்ன முடிவு எடுக்கிறார், கோவாவில் தனது ராயா சாம்ராஜ்யத்தை எவ்வாறு விரிவுபடுத்துகிறார் என்பதுதான் ‘டாக்ஸிக்’ சொல்ல முயன்றிருக்கும் கதை.
இதுதான் படத்தின் மேலோட்டமான கதை என்பதை குத்துமதிப்பாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம், படம் தொடங்கியது முதல் இறுதி வரை திரையில் நடப்பது இதுதான் என யூகிக்கவே சில பல நிமிடங்கள் ஆகும் அளவுக்கு குழப்பமான ஒரு திரைக்கதையை எழுதி, அதை ஏனோதானோவென எடுத்து ஒரு படமாக நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்.
இந்த படமே ஒரு முழுநீள சண்டைக்காட்சிதான். படம் முழுக்க ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார்கள், கத்தியைப் பயன்படுத்தி கழுத்தை கொடூரமாக அறுக்கிறார்கள், குண்டுகளை வீசுகிறார்கள். இன்னும் பல விதங்களில் (பார்வையாளர்களையும் சேர்த்து) கொலைச் செயல்களைச் செய்கிறார்கள்.
ஒரு படம் இந்த திசையில்தான் நகரப் போகிறது என்பதை 15 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களுக்கு தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்பதே திரைக்கதையின் நியமம். ஆனால், படத்தின் இடைவேளை வரையுமே படம் எதை நோக்கிச் செல்கிறது, யார் யாரை கொல்கிறார்கள், அவர்களுக்குள் என்ன பகை என்பதை தெரிந்து கொள்வதிலேயே நேரம் போய்விடுகிறது?
ஒருவேளை இடைவேளைக்குப் பிறகு படம் கதைக்குள் சென்றுவிட்டதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதுதான் இல்லை. அதன்பிறகு நாம் பயங்கர டயர்டாகி விடுவதால் இதன் பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற மனநிலைக்கு இயக்குநர் கொண்டு சென்று விடுகிறார்.
படம் தொடங்கி அரை மணி நேரத்திலேயே இடைவேளை எப்போது வரும் என்ற ஏக்கம் வந்துவிடுகிறது. இடைவேளை என்பது ஸ்னாக்ஸ் வாங்கவோ அல்லது பாத்ரூம் செல்வதற்காகவோ அல்ல. துப்பாக்கிகள், அரிவாள்கள், வெடிகுண்டுகள், தடிமனான கம்பிகள் போன்றவை மனித உடல்களைப் பதம் பார்க்கும் போது நம் மீது தெறிக்கும் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கும், பார்க்கும் பெண்களை எல்லாம் தன் பராக்கிரமத்தால் (?) வலையில் வீழ்த்தும் யஷ்ஷுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே என்ற எண்ணத்தினாலும்தான்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே அடித்தளமாக கொண்ட திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளைக் கோர்ப்பதற்கு ஒரு வலுவான கதைக்களம் இருக்கும். 'கே.ஜி.எஃப்' படத்திலுமே அதீத வன்முறை, ஓவர் பில்டப், அடுத்தடுத்த சண்டைக் காட்சிகள் என இதில் உள்ள அனைத்தும் உண்டு. ஆனால் அந்தப் படத்தில் அவற்றை இணைக்கக் கூடிய ஒரு நேர்த்தியான திரைக்கதை இருந்தது.
அந்தப் படங்களின் வெற்றிக்குப் பிறகு பல முன்னணி இயக்குநர்கள் போட்டி போட்டபோதிலும், யஷ் கீது மோகன்தாஸுக்கு வாய்ப்பளித்தார். டீசர் மற்றும் ட்ரெய்லரின் காட்சிகள் கீது ஏதோ மேஜிக் செய்யப்போகிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின.
ஆனால், படம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே ‘அதுல ஒண்ணும் இல்ல, கீழ போட்டுட்டு’ என்ற புகழ்பெற்ற மீமை நினைவுக்கு கொண்டு வந்துவிடுகிறது படம். ஆடைகள், துப்பாக்கி கலாச்சாரம், மாஃபியா மற்றும் ஹீரோ எலிவேஷன்கள் ஆகியவற்றை மட்டுமே பார்த்து யஷ் இந்த கதைக்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.
அடர்ந்த தாடியுடன் யஷ், அவரது மூக்கு முடி வரை தெரியும் அளவிலான மிக நெருக்கமான க்ளோஸ்-அப் காட்சியில், தலையைச் சாய்த்துக்கொண்டு சிகரெட் அல்லது சிகாரைப் பற்றவைத்து புகைத்து தள்ளுகிறார். படம் முழுக்க திரையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது தொடர்பான எச்சரிக்கை வாசகம் இடம்பெறாத காட்சிகளே இல்லை. தொப்பி மற்றும் நீளமான லெதர் கோட் அணிந்து கொண்டு, கேமராவை நோக்கி நேராகவோ பக்கவாட்டிலோ நடந்து வந்து, துப்பாக்கிகளாலும் வெறும் கரங்களாலும் ஆட்களைக் கொன்று குவிக்கிறார்.
இதை வேலையைத்தான் ‘கேஜிஎஃப்’ படங்களிலும் செய்தார் என்றாலும் முன்பே குறிப்பிட்டதைப் போல திரைக்கதை என்ற வஸ்து அவற்றை தாங்கிப் பிடித்தது. ஆனால் இங்கு அதேபோன்ற காட்சிகள் படம் முழுவதும் கிட்டத்தட்ட 50 முறை அப்படியே திரும்பத் திரும்ப வருகின்றன.
படத்தில் பல பெண் கதாபாத்திரங்கள் இருந்தாலும், யாருக்கும் முறையான தொடக்கமோ முடிவோ இல்லை. ருக்மிணி வசந்தின் கதாபாத்திரம் ஏன் ராயாவைக் காதலிக்கிறது என்பதற்குப் பதிலில்லை. கியாரா அத்வானியின் கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நயன்தாராவின் சகோதரி கதாபாத்திரமும், ஹூமா குரேஷியின் கதாபாத்திரமும் வெறும் பெயரளவில் மட்டுமே வந்து செல்கின்றன.
படம் ஒரு மாஃபியா கதையாகத் தொடங்கி, அக்கா - தம்பி பாசத்த்துக்கு மாறி, திடீரென ஒரு காதல் கதையாக உருவெடுத்து, பின்னர் தந்தை - மகன் பழிவாங்கும் கதையாக மாறி, இறுதியில் ஒரு சைக்காலஜிகல் திரில்லர் என தன் விருப்பம்போல பயணிக்கிறது.
இரண்டாம் பாதி பார்வையாளர்களின் பொறுமையை இன்னும் அதிகமாகச் சோதிக்கிறது. கதை தந்தை - மகன் பழிவாங்கும் கதையாக மாறும்போது படம் முற்றிலும் சுவாரஸ்யமற்றுப் போகிறது. யாருடைய கும்பல் எது, யார் யாரைத் தாக்குகிறார்கள், யார் யாரைக் காப்பாற்றுகிறார்கள் என்ற குழப்பம் தலைவலியை தருகிறது. 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நீளும் இப்படத்தில் குறைந்தது 3 மணி நேரத்தையாவது வெட்டி இருக்க வேண்டும் போல.
சில ஆண்டுகளுக்கு முன் வந்த 'அனிமல்' திரைப்படத்தின் தாக்கம் படத்தில் மிதமிஞ்சி இருக்கிறது. காட்டுமிராண்டி போல செயல்படும் நாயகனின் பிம்பத்தையே இதில் பயன்படுத்தியுள்ளனர். ஹீரோ யாரையாவது கொல்கிறார் அல்லது ஏதேனும் ஒரு பெண்ணுடன் கூத்தடிக்கிறார்.
பணத்தைச் செலவழிப்பதில் தயாரிப்பு நிறுவனம் எந்தக் கஞ்சத்தனமும் காட்டவில்லை. காட்சிகளும் தயாரிப்பு வடிவமைப்பும் படத்தின் மிகப் பெரிய பலம். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை மிகப் பெரிய ஏமாற்றம். கேஜிஎஃப் படங்களை தூக்கி நிறுத்திய அவரது இசை, இங்கு ஏற்கெனவே இருக்கும் தலைவலியை இரு மடங்காக்குவதில் செவ்வனே செயல்பட்டுள்ளது.
வசனங்கள் பல இடங்களில் குபீர் ரகம் “நான் ராணி மாதிரி வாழ்றேன், நீ சாணி மாதிரி வாழ்ற”, "யாரோட ரூட் மேப்ல இருக்கியோ, அவங்களோட ரூட்டை சந்தேகப்படாதே; இல்லன்னா ரூட்டோட பிடுங்கப்படுவாய்” போன்ற வசனங்கள் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை போக்கி ஆடியன்ஸை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளன.
படத்தில் க்ளைமாக்ஸ் ஒரு நல்ல சைக்காலாஜிக்கல் முயற்சி. ஆனால் ஒட்டுமொத்த படத்தையும் வீணடித்து விட்டு இப்படி ஒரு காட்சியை எழுதி என்ன பயன்?
யஷ்ஷிடமிருந்து வந்திருக்கும் இந்த 'டாக்ஸிக்' மாபெரும் ஏமாற்றமே. பல வருட உழைப்பும், கோடிக்கணக்கான பணமும், திறமையான நடிகர்களின் பங்களிப்பும் பலவீனமான எழுத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது.
கதையோ உணர்வுகளோ இல்லாத இந்த ரத்தக் களறி, பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் ஒரு 3 மணி நேர துன்பியல் சம்பவம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும் போது ஒருவித அசவுகரியமும் தலைவலியுமே மிச்சம். படத்தை தவறவிட்ட 18 வயதுக்கு உட்பட்டோர் அதிர்ஷ்டசாலிகள்.