📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 27, 2026 02:04 PM

Toxic Day 1 Box Office

Toxic Day 1 Box Office

சென்னை: யஷ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் அவருடன் நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று ரிலீஸான படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் அடி வாங்கத்தான் செய்திருக்கிறது. இந்நிலையில் முதல் நாள் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களின் மூலம் இந்தியாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் யஷ். அவ்விரண்டு படங்களுக்கு பல நூறு கோடி ரூபாயை வசூலில் அள்ளின. இதன் காரணமாக அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமுமே இருந்தது. அதன்படி நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்தார். இதில் அவருடன் நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

நேற்று ரிலீஸான படம்: இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடைபெற்று வந்தன. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வந்தபோது ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்தார்கள். ப்ரோமோஷன் பணிகளும் உச்சக்கட்டமாகவே இருந்தன. இப்படி ஏகப்பட்ட ஹைப்புகளை பற்ற வைத்து நேற்று படமானது தியேட்டர்களில் கோலாகலமாக ரிலீஸானது. யஷ்ஷுடைய ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலம் பூண வைத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி இருக்கு படம்?: வானளவு இருந்த எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு படம் புஸ்வானமாகவே இருந்தது. ஓவர் ஹீரோயிசம், லாஜிக்கே இல்லாத பல சீன்கள், அதீத வன்முறை என கேஜிஃப் மூடிலேயே படத்தை எடுத்து வைத்திருந்தார்கள். இதனால் யஷ்ஷுடைய ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு படம் திருப்தி தரவில்லை. அதிலும் கீதுவின் மேக்கிங் எல்லாம் ஒட்டவே இல்லை என நொந்துகொண்டார்கள்.யஷ் ரசிகர்கள்கூட முதல் காட்சிக்கு பிறகு அடுத்தடுத்த காட்சிகளில் முகம் சுளிக்க தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே வாருங்கள் யஷ்: முக்கியமாக யஷ்ஷின் நடிப்பும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும், லுக்கும் தரமாகத்தான் இருந்தன. இருப்பினும் அதையெல்லாம் கேஜிஃப் படங்களிலேயே பார்த்துவிட்டோம்; அவர் இன்னும் அதே மூடில்தான் புதிய படங்களில் நடிக்கிறார் என்பது இதில் உறுதியாகிவிட்டது. வெறும் ஹீரோயிசத்தை வைத்துக்கொண்டு மட்டும் காலம் தள்ள முடியாது. இனிமேலாவது அவர் சுதாரித்துக்கொள்ளவில்லை என்றால்; எவ்வளவு சீக்கிரம் மேலே போவாரோ அவ்வளவு சீக்கிரம் கீழே வந்துவிடுவார் என்று உறுதியோடு சொல்கிறார்கள் ரசிகர்கள். யஷ் இதை தீவிரமாக பரிசீலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டாக்சிக் வசூல் நிலவரம்: படம் முதல் காட்சி முடிந்ததிலிருந்தே பலரிடம் நெகட்டிவ் விமர்சனங்களைத்தான் பெற்று வருகிறது. இருப்பினும் முதல் நாளில் இருந்த எதிர்பார்ப்பு காரணமாக வசூலில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றே தெரிகிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் நாளான நேற்று இந்தியாவில் அந்தப் படம் மொத்தம் 101.10 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டாலும் இன்னமும் அதிகமாகவே எதிர்பார்த்திருந்தது படக்குழு.

நேற்றிலிருந்து படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. எனவே அதெல்லாம் சேர்ந்து இன்றிலிருந்து தியேட்டருக்கு கூட்டத்தை குறைத்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால் வசூல் இன்னும் கீழே வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்க்காத ரிசல்ட் வந்துவிட்டதால் படக்குழு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.