📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 08, 2026 05:03 PM

உயர்ந்தது அரிசி, பருப்பு விலை: உருள்கிறது எல் நினோ தலை

உயர்ந்தது அரிசி, பருப்பு விலை: உருள்கிறது எல் நினோ தலை

கோவை:பருவமழை சரியாக பெய்யாததால், தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பருப்பு வகைகள் மற்றும் அரிசி விலை உயர்ந்துள்ளது.

தீபாவளி நெருங்குவதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் கூறினார்.

மசாலா பொருட்கள், மொத்த விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. பருப்பு வகைகள் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் அதிகரித்துள்ளது.

”இன்னும் 4 மாதம், அதாவது பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பு இல்லை. எதிர்பார்த்த மழை பெய்யாமல் போனது காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். மழை பொய்த்ததற்கு எல் நினோ பாதிப்பு காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விலை உயர்வு இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுதும் இதுதான் நிலை” என்றார் பிரபாகர்.

அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணனும், ''தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகாவிலும் அரிசி விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக இந்த சீசனில் 2 அல்லது 3 ரூபாய் உயரும். இப்போது சில ரகங்கள் தவிர எல்லா அரிசியும் கிலோவுக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது'' என்றார்.

எண்ணெய் விலை குறைந்திருக்கிறது என சந்தோச செய்தி சொல்கிறார் அந்த சங்கத்தின் செயலாளர் இருதயராஜா. ''பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் கடந்த மாதம் மொத்த விற்பனையில், 152 மற்றும் 178 ரூபாய்க்கு விற்றது. இப்போது லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. மற்ற எண்ணெய்கள் விலை மாறவில்லை'' என்றார்.

பை நிறைய மளிகை வாங்கி சென்ற ராம்நகர் சீதாலட்சுமி, “ஒவ்வொரு வருசமும் பண்டிகை சீசனில் விலை உயரத்தான் செய்கிறது. வியாபாரிகளும் அரசும் ஏதாவது காரணம் சொல்லி மக்கள் காதில் பூ சுற்றுவார்கள். இந்த ஆண்டு எல் நினோ தலையில் பழியை போடுகிறார்கள். அது யார் என்பதே தெரியாது” என்று கமென்ட் அடித்தார்.

சில பொருட்களின் சில்லரை விலை: கடந்த மாதமும் இந்த மாதமும் (கிலோ)துவரம் பருப்பு 140 160உருட்டு உளுந்து 130 145 கடலைப் பருப்பு 100 115பாசிப்பருப்பு 110 120பச்சை பயறு 130 145 வெள்ளை சுண்டல் 140 160கருப்பு சுண்டல் 90 110பாதம் பருப்பு 1050 1250முந்திரி பருப்பு 950 1000 சமையல் எண்ணெய் (லிட்டர்)பாமாயில் 152 142 சூரியகாந்தி எண்ணெய் 178 168