📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 14, 2026 04:02 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.20 வரை எங்கெல்லாம் மிதமான மழை வாய்ப்பு?

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.20 வரை எங்கெல்லாம் மிதமான மழை வாய்ப்பு?

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.15) முதல் ஆக.20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.15) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர இடங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.18 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு:

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 12 செ.மீ, அரியலூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தலா 7 செ.மீ, கோவை மாவட்டம் சோலையார், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.