வானிலை தகவல் ....எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை!
வானிலை தகவல் ....எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை:
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கான மழை நிலவரம்:
ஆகஸ்ட் 28 முதல் 30-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், பிற தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27 முதல் 30-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இருப்பினும் வட உள் தமிழகத்தில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும். சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஆகஸ்ட் 27 முதல் 30-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. அரபிக்கடலின் சில பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் எச்சரிக்கை செய்யப்பட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.