வார்டு மேம்பாட்டு நிதி கேட்டு வரிந்துகட்டிய கவுன்சிலர்கள்; மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர்
சென்னை: கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி, ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததை கண்டித்து, தி.மு.க., மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து, மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, அ.தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ், வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள், கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.
நிதி நெருக்கடி காரணமான கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி, ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்தும், மாநகராட்சிக்கு அவசர கால நிதி விடுவிக்காத தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்வாறு கருப்பு உடையில் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
நிதி விடுவிக்காதது தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர் மானத்தையும் தி.மு.க.,வினர் கொண்டு வந்தனர். இதற்கு, த.வெ.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், வி.சி.க., - கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதேபோல், பா.ஜ., - அ.தி.மு.க.,வும் ஆதரவு அளித்தன.
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் துணை மேயர் மகேஷ்குமார் பேசியதாவது: எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வசதி, கூடுதல் நிதி ஒதுக்குவது போல், மாநகராட்சியின் 200 வார்டு கவுன்சிலர்களுக்கும் வார்டு மேம்பாட்டு நிதியை இம்மாதமே விடுவிக்க வேண்டும். நிதி இல்லாததால், கவுன்சிலர்களால் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை.
மாநகராட்சி பணிகள் மு டிந்து ஆறு மாதங்கள் கடந்தும், ஒப்பந்ததாரர்களுக்கான தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது. மழைக்காலத்திற்குள் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வசதியாக, நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்.
துாய்மை பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் மதிய உணவு வருவதில்லை; தர மும் சுவையும் குறைவாக உள்ளது. எனவே, உணவு வழங்குவதற்கு பதிலாக தினசரி, 100 ரூபாய் உணவு படியாக வழங்க வேண்டும்.
சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டடங்களின் உயர வரம்பை, 20 மீட்டராக உயர்த்த வேண்டும். கவுன்சிலர்களுக்கு 50,000 ரூபாய் செலவின தொகை வழங்குவதுடன், துணை மேயர், நிலைக்குழு தலைவர்களுக்கும் கார் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது: பா.ஜ., உமா ஆனந்தன்: நிதியின்றி கூட்டத்தில் பங்கேற்பது பயனில்லாத ஒன்று. அதற்கு பதிலாக, ராஜினாமா செய்துவிட்டு வெளியில் சென்று விடலாம். நாங்கள், 'இன்னோவா கார்' கேட்கவில்லை; மக்களுக்கு பணி செய்ய நிதி கேட்கிறோம்.
வி.சி.க., யாழினி: தி.மு.க., ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கடந்த ஆட்சியில் பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்பட்டது; தற்போது அந்நிலை இல்லை.
அ.தி.மு.க., சத்தியநாதன்: எந்த திட்டங்களையும் செய்ய முடியாதபோது, கவுன்சிலர் பதவியே தேவையில்லை. ராஜினாமா செய்துவிட்டு போகலாம். பணி ஆணை கொடுத்து ஏழு மாதங்களாகியும், ஒப்பந்ததாரர்கள் பணியை தொடங்கவில்லை.
தி.மு.க., ராஜா: மாநகராட்சியில் அதிகாரிகள், அமைச்சர்கள், மண்டல வாரியான பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்கே தண்ணீர் நிற்கும் என தெரியாது.
வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன்: சென்னையில் மலம் கலந்த குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்நீரை தான் மக்கள் குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.
தி.மு.க., கவுன்சிலர் வேலு பேசுகையில், சென்னையில் மழைக்கால தடுப்பு நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, மாநகராட்சி கமிஷனர் சமீரன், ''மழைக்கால தடுப்பு நடவடிக்கைக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், தலைமை செயலர், அதிகாரிகள் மற்றும் மேயர், துணை மேயர் உள்ளிட்டோருடன் அவ்வப்போது ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது,'' என்றார். துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், ''எங்களுக்கு தான் மக்கள் பிரச்னை தெரியும். பெரும்பாலான கூட்டங்களுக்கு எங்களை அழைப்பதில்லை,'' என்றார். மேயர் பிரியா பேசுகையில், ''அரசு சார்பாக நடந்த மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர் பான கூட்டங்களுக்கு, எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. நடப்பது மக்கள் ஆட்சியா; கவர்னர் ஆட்சியா என தெரியவில்லை,'' என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: * மாநகராட்சியில் உள்ள நிர்பயா நிதி உள்ளிட்ட 150 கோடி ரூபாய், நிலையான வைப்பு நிதியில் வங்கியில் போடப்பட உள்ளது. அதை வைத்து, வங்கியில் மாநகராட்சியின் பல்வேறு பணி களுக்கு, 300 கோடி ரூபாய் கடன் பெறப்படும் * சென்னை மாநகராட்சியில், 3,935 துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளனர் * ஜெயந்தி டெய்ஸி விலங்குகள் காப்பகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, மாநகராட்சி ஏற்று நிர்வகிக்க உள்ளது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.