“வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வாலுக்கு தண்டனை கொடுக்க சொன்னா திட்டுவீங்களா?” மஞ்ச்ரேக்கருக்கு கணேஷ் ஆதரவு
“வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வாலுக்கு தண்டனை கொடுக்க சொன்னா திட்டுவீங்களா?” மஞ்ச்ரேக்கருக்கு கணேஷ் ஆதரவு
மும்பை: இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் தவறான செயல்களை கண்டித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தொடா கணேஷ் குரல் கொடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அசிதா பெர்னாண்டோ அதனை ஆக்ரோஷமாகக் கொண்டாடினார். அப்போது அவர் சொன்ன சில வார்த்தைகளால் ஆத்திரமடைந்த ஜெய்ஸ்வால் பெவிலியன் நோக்கிச் செல்வதைத் தவிர்த்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேருக்கு நேர் தலையால் முட்டினார்.
இந்தச் சம்பவத்திற்காக ஐசிசி இரு வீரர்களுக்கும் தலா 25 சதவீத அபராதம் மட்டுமே விதித்தது. இதை ஏற்காத சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "தவறு செய்யும் வீரர்களுக்கு அதிக தண்டனைகளை வழங்காமல் சும்மா விட்டால் அவர்கள் மீண்டும் அதே தவறைச் செய்யப் பழகுவார்கள்" என்று ஐசிசி மற்றும் பிசிசிஐ அமைப்புகளைச் சாடினார்.
மேலும், இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் இவ்வாறு கையால் தள்ளி விட்டு மோதலில் ஈடுபட்டார். அவரும் எந்த தண்டனையும் இன்றி தப்பியதை அவர் சுட்டிக்காட்டினார். வார்த்தை மோதல் என்பதை தாண்டி தலையால் முட்டுவது, கைகளால் தள்ளி விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டும் ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷிக்கு கடும் தண்டனைகள் கிடைக்கவில்லை என்பதை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சுட்டிக் காட்டி இருந்தார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த பதிவிற்காகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கடுமையாகக் கலாய்த்து, வர்ணனையாளர் குழுவிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் விமர்சித்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தோடா கணேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் மஞ்ச்ரேக்கருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இங்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுவது முற்றிலும் சரியானது. ரசிகர்கள் ஏன் அவரை விமர்சிக்கிறார்கள்? ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் அனீஷை முட்டித் தள்ளிய பராஸ் டோக்ரா வெறும் அபராதத்துடன் தப்பினார். இப்போது ஜெய்ஸ்வாலும் அபராதத்துடன் தப்பியுள்ளார். இதையே நாம் ஒரு முன்னுதாரணமாக வைத்தால், எதிர்காலத்தில் மைதானத்திலேயே கிரிக்கெட் வீரர்கள் குத்துச்சண்டையில் ஈடுபடும் நாட்கள் தொலைவில் இல்லை. கிரிக்கெட் விளையாட்டில் உடல்ரீதியான வன்முறைக்கு இடமே இல்லை" என்று எச்சரித்துள்ளார்.
மைதானத்தில் வீரர்களின் ஒழுங்குமுறையை உறுதி செய்ய கடுமையான விதிகள் தேவை என்று மஞ்ச்ரேக்கர் மற்றும் தோடா கணேஷ் ஆகிய இரு முன்னாள் வீரர்களும் கூறியிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.