வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க சூதாட்டத் தடை, சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்கள் மீதான சூதாட்டத் தடைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
சூதாட்டப் பிரச்சினைகளுக்கான தேசிய மன்றத்தின் புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூர் பூல்ஸ் இணையவழிப் பந்தயப்பிடிப்பில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் ஏறத்தாழ 4,100ஆக இருந்தது. 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,000ஆக உயர்ந்தது.
அதே காலகட்டத்தில், ஜாக்பாட் இயந்திர அறைகளில் சூதாடத் தடை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,100லிருந்து 28,000ஆக ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்தது.
இருப்பினும், சூதாட்டக் கூடங்களில் நுழையத் தடை விதிக்கப்படும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறாமல் ஏறத்தாழ 155,000ஆக உள்ளது. தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரில் 90 விழுக்காட்டினர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவர்.
இந்தத் தடையை ஊழியர்கள் தாங்களாகவோ அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதலாளிகளோ விண்ணப்பித்து நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் குறைந்தது ஓராண்டு காலத்துக்கு அவர்கள் இத்தகைய சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
தடை அதிகரிப்பு என்பது வெளிநாட்டு ஊழியர்களிடையே சூதாட்டப் பிரச்சினை அதிகரித்திருப்பதை மட்டும் குறிக்கவில்லை. மாறாகத் தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க முதலாளிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இதற்குக் முக்கியக் காரணம் என்று மன்றத்தின் தலைவர் சிம் கிம் குவான் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு முதல், சூதாட்டக் கூடங்களைத் தாண்டி பிற சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்தும் ஊழியர்களை விலக்கி வைக்க முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் நுழைவுக் கட்டணம் ($150) இன்றிச் சூதாட்டக் கூடங்களுக்குச் செல்ல முடியும் என்பதால், அவர்களைச் சூதாட்டத் தீமைகளிலிருந்து பாதுகாக்க முதலாளிகளே மூன்றில் இரண்டு பங்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றனர். சில நிறுவனங்கள், வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே ஊழியர்களைச் சுயதடை விண்ணப்பம் செய்ய ஊக்குவிக்கின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அதேவேளையில், கடன்காரர்களின் தொல்லை, முகவைக் கடன் சுமையை விரைவாக அடைக்கும் எண்ணம், சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் ஆகியவை வெளிநாட்டு ஊழியர்களைச் சூதாட்டத்தை நோக்கி ஈர்க்கும் காரணங்களாக அமைவதாகச் சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறைந்த வருமானம் ஈட்டும் இந்த ஊழியர்கள் சூதாட்டத்தால் பணத்தை இழக்கும்போது, அது அவர்களின் பணித்திறனையும் மனநலனையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.