📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 11, 2026 06:04 AM

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீபாவளி டிரைவ் 2026

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீபாவளி டிரைவ் 2026

குடும்பங்களைவிட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தீபாவளிப் பண்டிகை தித்திப்பானதாக அமைய வேன்டும் எனும் நோக்கில், ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அறநிறுவனம் ஆண்டுதோறும் தீபாவளி உணவு விநியோக முன்னெடுப்பு ஏற்பாட்டைச் செய்துவருகிறது.

2015ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்ட காலந்தொட்டு அதன் ஓர் அங்கமாக இந்தத் தீபாவளி உணவு விநியோக நடவடிக்கை விளங்குகிறது.

கொவிட்-19 தொற்றுக் காலத்திலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகையை ஒட்டி பீட்சா, சமோசா போன்ற உணவு வகைகளை ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியர்கள் விநியோகித்தனர்.

இவ்வாண்டு இந்தத் தீபாவளி முன்னெடுப்பு தொடர்ந்து தனது 11வது ஆண்டை எட்டவுள்ளது.

நேரடி விநியோக நிகழ்வு

இம்மாதம் 31ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை சிங்கப்பூர் முழுவதும் நேரடியாக வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பீட்சாவும் சமோசாவும் விநியோகம் செய்யப்படவுள்ளன.

தங்கள் ஊழியர்களுக்கு அந்த உணவுவகைகள் சென்றடைய வேண்டுமெனில் நிறுவனங்களும் தங்குவிடுதிகளும் ‘ஐஆர்ஆர்’ அமைப்பைத் தொடர்புகொள்ளலாம். திரட்டப்படும் நிதிக்கேற்ப இயன்றால் ‘ஐஆர்ஆர்’ அவர்களுக்கு விநியோகம் செய்யும்.

பொதுமக்களிடமிருந்து இணையம்வழி திரட்டப்படும் நிதியுடன் நிறுவனங்களின் ஆதரவும் இம்முயற்சியைச் சாத்தியமாக்கிறது என்றார் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) நிறுவனர் தீபா சுவாமிநாதன்.

“தொடக்கத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொலைபேசி அட்டைகளை வழங்கினோம். எங்களது அமைப்பு வளர்ச்சியடைந்தபின், சில ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பல்வேறு வகையான உணவுகளை வழங்கும் நோக்கில், பீட்சா, சமோசா போன்றவற்றை விநியோகிக்கும் பணிக்கு நாங்கள் மாறினோம்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“அதற்கு உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களிடமிருந்து தொடர்ந்து ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்”, என்றார் திருவாட்டி தீபா.

தொண்டூழியர்கள் பதிவு

சிங்கப்பூர் முழுவதும் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் இணைந்துகொள்ள வாகனம் வைத்துள்ள தொண்டூழியர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

வாகனம் வைத்துள்ள தொண்டூழியர்களுக்கு, நிகழ்வு நடைபெறும் நாளில் அரங்குகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தளவாடப் பணிகளில் உதவுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தொண்டூழியர்களுக்கான பதிவுப் படிவங்கள் அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்படும்.

நன்கொடை இணையத்தளம்

‘ஐஆர்ஆர்’ அறநிறுவனத்திற்கு https://www.giving.sg/donate/campaign/deepavali-drive-2026 என்ற இணையத்தளம் வழியாக நவம்பர் 13ஆம் தேதிவரை நன்கொடை வழங்கலாம்.