விஜய் அரசின் முதல் பட்ஜெட்: பொருளாதார வளர்ச்சிக்கான வரைவுப் பாதையும், கொள்கைத் தெளிவும் உண்டா?
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: பொருளாதார வளர்ச்சிக்கான வரைவுப் பாதையும், கொள்கைத் தெளிவும் உண்டா?
பொருளாதார வளர்ச்சி இலக்கு வரவேற்கத்தக்கது என்றாலும், எப்படி, எந்தெந்த வழிமுறைகள் மூலம் இலக்கு எட்டப்படும் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான், அந்த இலக்கின் மீது நம்பகத்தன்மை ஏற்படும்.
பதவியேற்று சில மாதங்களே ஆன நிலையில், அனைத்துத் தரப்பினரின் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையிலான பட்ஜெட்டை கொடுப்பது எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் சவாலான ஒன்று. அதிலும், நிர்வாகத்துக்கு புதியவர்கள் என்பதால், இவர்களுக்குக் கூடுதல் சவால்கள். இந்த பட்ஜெட்டை பொறுத்தளவில், முதல்வர் விஜய், நிதியமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் சித்திக் ஆகியோருக்கு முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கூடுதல் நிதியுதவி, தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, போதைப்பொருள் இல்லாத தமிழகம் உட்பட ஏராளமான வாக்குறுதிகளை த.வெ.க வாரி வழங்கியது. ஆனால், இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்றால் நிதி ஆதாரத்துக்கு எங்கே போவது?
ஏற்கெனவே, ஆட்சிக்கு வந்தவுடன், முந்தைய தி.மு.க அரசு கஜானாவை காலி செய்துவிட்டுப் போயிருக்கிறது என்ற விமர்சனத்தை முதல்வர் விஜய் முன்வைத்தார். அத்துடன், வெள்ளை அறிக்கை வெளியிட்டு, தமிழக அரசு எந்தளவுக்கு நிதி நெருக்கடியில் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தினார் முதல்வர் விஜய். அதே நேரம், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய அழுத்தமும் த.வெ.க அரசுக்கு இருந்தது.
இந்த நிலையில்தான், நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், நிதி மேலாண்மையை மேம்படுத்தவும், திட்டங்களை நிறைவேற்றவும், மாற்று வருவாய்க்கான வழி வகைகளைக் கண்டறியப் பொருளாதார வல்லுநர் திரு மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவை பட்ஜெட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நியமித்தது. அதுவும், அரசின் நிதி நெருக்கடியை மக்களுக்கு உணர்த்தும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
நிதி, நிர்வாகம் ரீதியான சவால்கள் நிறைந்த சூழலில் தான், முதல் பட்ஜெட்டைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. optics ரீதியாக நிதி அமைச்சரின் நீண்ட உரையைக் கண்டபோது, இந்த அரசுக்கு பட்ஜெட் மீதான அக்கறை வெளிப்பட்டது. மாமன் சீர், அண்ணன் சீர் போன்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் இருந்தாலும், பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஆனாலும், பெண்கள், மாணவர்கள், முதியோர், இளைஞர் என சில தரப்பினருக்கான சில அறிவிப்புகளை பட்ஜெட்டில் காண முடிந்தது.
மாநிலங்களுக்கு இடையே தற்போதைய பொருளாதார போட்டி சூழலில், தமிழக பொருளாதார இலக்கு ஓர் உன்னத லட்சியமாக இருந்தாலும், தற்போதுள்ள பொருளாதார, தொழில் கட்டமைப்பு அந்த இலக்கை அடைவதற்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டிப்பிடிக்கத் தேவையான பொருளாதார முதலீடுகள் குறித்த திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் இலக்கு நிர்ணயம் செய்தது போல, முதலீடுகளுக்கும் ஓர் இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான பாதை வரைவை அறிவித்திருக்க வேண்டும். அது, பொருளாதார வளர்ச்சியின் இலக்குக்கு வலுசேர்த்திருக்கும். தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் தெளிவான பாதை வரைவை பட்ஜெட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவோம் என்று அரசு விளக்கம் கொடுத்திருந்தாலும், அது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்றால் எப்படி?
மேலும், கடன் நெருக்கடி நிலை என்பது இந்த ஆட்சிக்கு ஏற்பட்ட ஒரு நிர்ப்பந்தம் என்றாலும், கடன் நிர்வாகம், வாங்கிய கடன், வாங்கப் போகும் கடன்கள் ஆகியவற்றுக்கான செயல்திட்டங்கள் குறித்தும் இந்த பட்ஜெட்டில் விரிவான விளக்கங்கள் இல்லை. அலுவாலியா குழு கூடுதல் வருவாய் மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த விஷயங்களை ஆராயும் என்பதால், இது பட்ஜெட்டில் விடப்பட்டதா என்பது தெரியவில்லை. ஒரு குழு அமைக்கப்பட்டாலும் பட்ஜெட்டில் நிதி நிர்வாகம், கடன் நிர்வாகம் குறித்த ஆழமான விஷயங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
பொதுவாக, அரசின் பட்ஜெட் என்பது அந்த அரசின் சமூகப் பொருளாதார இலக்குகளின் ‘விஷன் டாக்குமெண்ட்’ என்றே கொள்ளலாம். அந்த அடிப்படையில், இந்த பட்ஜெட் அரசின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையிலிருந்தாலும், விஷயங்கள் துல்லியமாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் ஒரு தீம் அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமாக வைத்துக்கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தினால், அதன் செயல்பாடு அந்த இலக்கை அடைவதற்கான வழியாக அமையும்.
நடப்பு அரசின் இந்த பட்ஜெட், அனைத்து தரப்பினரையும் மேலோட்டமாக அணுகியிருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், நிர்வாக ரீதியாக இந்த அரசும், அதன் அங்கத்தினரும் புதிதாக இருப்பதால் நிதி மேலாண்மை மற்றும் நிதி நிர்வாகம் குறித்த நுணுக்கங்களை அறிந்துகொள்ளக் கால அவகாசம் தேவைப்படும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பட்ஜெட் நிகழ்வு வந்து விட்டபடியால், இந்த பட்ஜெட் ஒரு பொதுவான, மேலோட்டமான பட்ஜெட்டாக அமைந்திருப்பதில் வியப்பில்லை.
மேலும், ஒரு பட்ஜெட் தயாரிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தாலும், பொருளாதார ரீதியாகத் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, நிதி நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் சரியான வழியில் கொண்டு செல்ல தேவையான தொழில்முறை பொருளாதார ஆலோசகரை அமர்த்துவது இந்த அரசின் பொருளாதார இலக்குகளை அடைய உதவியாக இருக்கும். மேலும், நிர்வாகத்திற்கு இந்த அரசின் அங்கத்தினர், குறிப்பாக நிதி அமைச்சரும் புதியவர் என்பதால் தேர்ந்த பொருளாதார ஆலோசகரை நியமிப்பது என்பது இன்றியமையாதது ஆகும்.
பட்ஜெட்டிற்கு அப்பாற்பட்டு பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடுகள் சார்ந்த பல விஷயங்கள் நடைபெறும் என்பதால், இந்த அரசின் செயல்பாடுகள் பட்ஜெட்டை மட்டும் வைத்துக் கணித்து விட முடியாது. பட்ஜெட்டையும் தாண்டி இந்த அரசு எடுக்கும் முடிவுகள், அதிலும் குறிப்பாக 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்த இலக்கின் மீதான நடவடிக்கைகள் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.