விஜய் இல்லாத திரையுலகம் எப்படி இருக்கிறது? எதிர்பார்ப்பைக் கிளப்பிய நடிகர் கார்த்தியின் பதில்
விஜய் இல்லாத திரையுலகம் எப்படி இருக்கிறது? எதிர்பார்ப்பைக் கிளப்பிய நடிகர் கார்த்தியின் பதில்
லோகேஷ் கனகராஜ் நடிகராகி விட்டார் என்றும், அவரை விரைவில் ’கைதி 2’ படத்தை எடுக்கச் சொல்கிறேன் என்றும் நடிகர் கார்த்தி கூறினார்.
Published : September 2, 2026 at 11:03 AM IST
திருநெல்வேலி: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திரையுலகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார்.
திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் ’சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகை ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், ”கல்லூரி படிக்கும் போது திருநெல்வேலிக்கு வந்திருக்கிறேன். பாளையங்கோட்டை, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றியிருக்கிறேன். இங்கு வந்தாலே கவனிப்பு அதிகமாக இருக்கும். ஒரு வேலை விருந்து வைத்தால் பரவாயில்லை.
திருநெல்வேலியில் இருந்தால் 3 நேரமும் விருந்து தான் கிடைக்கும். ’சர்தார் 2’ திரைப்படம் கடுமையான உழைப்பில், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. வரும் 10ஆம் தேதி வியாழக்கிழமை திரைப்படம் வெளியாகிறது” என்றார். கைதி 2 என ரசிகர்கள் கூச்சலிட்ட போது, ’சர்தார் 2’ படத்திற்கு பின்னர், ’கைதி 2’ படத்தை வெளியிடுகிறோம். லோகேஷ் கனகராஜ் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வந்து படம் எடுக்கச் சொல்லி லோகேஷிடம் கூறுகிறேன்” என தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பாடல் பாடுமாறு ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது நடிகர் கார்த்தி, “அண்ணனை விடுங்கள், கொலகார பாவிங்களா” என நகைச்சுவையாக கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் எஸ்.ஜே,.சூர்யா தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பாடல் பாடியதை நெட்டிசன்கள் கலாய்த்து ஆன்லைனில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் இல்லாத சினிமா எப்படி இருக்கு?
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்தி, ”சர்தார் 2 திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. பெரும் உழைப்பில் சர்க்கார் 2 படத்தை உருவாக்கியுள்ளோம். ‘மெய்யழகன்’ என்று ஒரு படம் நடித்தேன். அப்படத்தை அனைவரும் பாராட்டினர். அனைத்துப் படங்களும் பாராட்ட வேண்டும் என தான் எடுக்கப்படுகிறது. படம் நன்றாக இருந்தால் கொண்டாடுவீர்கள், சரியாக நடிக்கவில்லை என்றால் திட்டுவீர்கள்” என கூறினார்.
தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திரையுலகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ”நீங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும். திரை உலகம் நன்றாக இருக்கிறது. தற்போது சிறிய படங்கள் பெரிய அளவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டில் நன்றாக ஓடிய சின்ன படங்கள் அதிகம் உள்ளது. படங்கள் நன்றாக இருந்தால், மக்கள் பார்க்க தயாராக இருக்கின்றனர்” என்றார். பின்னர் ’பருத்திவீரன் 2’ எடுக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ”பருத்திவீரன் படத்தில் தான் என்னை கொன்று விட்டார்களே பிறகு என்ன இருக்கிறது” என நகைச்சுவையாக பேசினார்.