📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 09, 2026 10:03 AM

விஜய்யின் லண்டன் விசிட்... அஜித் கார் ரேஸை நேரில் காண்கிறாரா?

விஜய்யின் லண்டன் விசிட்... அஜித் கார் ரேஸை நேரில் காண்கிறாரா?

விஜய்யின் லண்டன் விசிட்... அஜித் கார் ரேஸை நேரில் காண்கிறாரா?

அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்கவுள்ள கார் பந்தயம், அதே நேரத்தில் விஜய்யின் லண்டன் பயணம் என அடுத்த சில நாட்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஒன்றிணைந்துள்ளன.

அஜித் குமார் ரேசிங் அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெறவுள்ள Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளது. இதனிடையே, அஜித்தின் கார் பந்தயப் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘Gladiators - In Pursuit of Challenges’ ஆவணப்படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏ.எல். விஜய் இயக்கத்தில், ஷாலினி அஜித் குமார் தயாரித்துள்ள இந்த ஆவணப்படம், அஜித்தின் கார் பந்தய ஆர்வம், போட்டிகளில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவரது ரேசிங் பயணத்தை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை பிரிட்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். விஜய்யுடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் பிரிட்டன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்திற்கு விஜய் நேரில் சென்று தூதரக பாஸ்போர்ட் பெற்றார்.

ஒருபுறம் விஜய்யின் லண்டன் பயணம்... மறுபுறம் அதே நேரத்தில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் அஜித்தின் கார் பந்தயம்...

இதனால், லண்டன் செல்லும் விஜய், சில்வர்ஸ்டோனில் நடைபெறும் அஜித்தின் ரேஸை நேரில் சென்று பார்ப்பாரா? விஜய் –அஜித் சந்திப்பு நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இருவரும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் என்பதால், விஜய் நேரில் சென்று அஜித்தின் ரேஸை பார்வையிட்டால் அது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், விஜய்யின் லண்டன் பயணத் திட்டத்தில் சில்வர்ஸ்டோன் ரேஸை நேரில் பார்ப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனவே, விஜய் - அஜித் சந்திப்பு நிகழுமா? சில்வர்ஸ்டோனில் விஜய் தோன்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.