விமர்சனம்: விஸ்வநாத் & சன்ஸ்
விமர்சனம்: விஸ்வநாத் & சன்ஸ்
ராஜீவ் மேனன், ராதிகா தம்பதியின் ஒரே மகன், சஞ்சு விஸ்வநாத் என்கிற மிகப்பெரிய தொழிலதிபர் சூர்யா. ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்க்கும் அவர், நடிகை ரவீனா டாண்டனை ராஜீவ் மேனன் திருமணம் செய்ததற்காக, தனக்கு திருமணமே வேண்டாம் என்று கறாராக இருக்கிறார். குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் என்ற அம்மாவின் வற்புறுத்தலுக்காக, வாடகைத்தாய் மூலம் பிறந்த மகனுக்கு சூர்யா தந்தை ஆகிறார். அப்போது திடீரென்று குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால், மகனை காப்பாற்ற வாடகைத்தாய் மமிதா பைஜுவை சூர்யா இந்தியாவுக்கு அழைத்து வருகிறார். பணத்துக்காக வாடகைத்தாயாக மாறிய மமிதா பைஜு, பிறகு சூர்யாவை காதலிக்கிறார். தன்னைவிட 20 வயது குறைந்த அவரை சூர்யா ஏற்றுக்கொண்டாரா? குழந்தை பிழைத்ததா என்பது மீதி கதை.
தந்தை என்றாலே வெறுப்பு, தாய் மீது பாசம், குழந்தையிடம் அன்பு, தன்னை நேசிக்கும் பெண்ணிடம் கண்ணியம் என்று, மிகப்பெரிய தொழிலதிபர் கேரக்டரில் சூர்யா புகுந்து விளையாடி இருக்கிறார். தாயை நினைத்து அவர் அழும் காட்சியில், கல் மனமும் கரைந்துவிடுகிறது. மமிதா பைஜுவுக்கு இது மறக்க முடியாத படம். அசால்ட்டான நடிப்பில், ‘கஜினி’ அசினை சற்று ஓரங்கட்டி விடுகிறார். காதலுக்காக ஏங்குவதை அற்புதமாக வெளிப்படுத்துகிறார். ராதிகா தனது பண்பட்ட அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, பவானி, ராஜீவ் மேனன், ஜார்ஜ் மரியன், காளி வெங்கட், மைம் கோபி, ரகு பாபு, தீபா சங்கர், ஜாவா சுந்தரேசன் ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.
நிமிஷ் ரவியின் யதார்த்தமான ஒளிப்பதிவு பிரமிப்பு ஏற்படுத்துகிறது. இன்னொரு ஹீரோ, ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை. அவரது பின்னணி இசையும், பாடல்களும் தரமாக இருக்கிறது. எடிட்டர் நவீன் நூலியின் பணி கச்சிதம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில், கண்ணியமாக எழுதி இயக்கியுள்ள வெங்கி அட்லூரி, திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக உருவாக்கி இருக்கலாம். முற்பகுதியின் அடர்த்தி, பிற்பகுதியில் குறைவு. சர்ச்சைக்குரிய வாடகைத்தாய் விஷயத்தை இவ்வளவு மேலோட்டமாக சொன்னது, படத்தின் வீரியத்தை குறைக்கிறது. திருமணத்தை வெறுக்கும் ஹீரோ, பிறகு என்ன செய்வார் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. குடும்ப உறவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கின்றனர்.