📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 22, 2026 07:06 PM

யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம்: மறுபரிசீலனை அவசியம்

யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம்: மறுபரிசீலனை அவசியம்

தனியார் பணப் பரிவர்த்தனைச் செயலியான யுபிஐ மூலம் ரூ.2,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு வணிக நிறுவனங்களிடம் இருந்து அக்டோபர் 15 முதல் 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு, வணிகர்களை மட்டுமல்லாமல் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வணிக நிறுவனங்கள் தங்களது கட்டணச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கக்கூடும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. இந்தியாவில் 55.48 கோடிக்கும் அதிகமானோர் யுபிஐ பரிவர்த்தனையைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் 2,100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை யுபிஐ கையாளுகிறது.

இந்தச் சூழலில், இப்படியான அறிவிப்பு வெளியாகியிருப்பது விவாதங்களை எழுப்பியிருக்கிறது. தனிநபர் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்டாலும் ரயில்வே, எரிவாயு, தொலைத்தொடர்பு, காப்பீடு போன்றவற்றுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தேசியப் பரிவர்த்தனைக் கழகம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து காகிதம் இல்லாப் பணப் பரிவர்த்தனையை மேம்படுத்தும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன் இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டணமில்லாப் பரிவர்த்தனை என்பதால், சாமானியர் முதல் பெருவணிக நிறுவனங்கள் வரை இந்தச் சேவையைச் சார்ந்திருக்கின்றனர்.