10.5% இட ஒதுக்கீடு கோரி சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்
10.5% இட ஒதுக்கீடு கோரி சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் - ஜெ குரு பாமக அறிவிப்பு
"முதலில் 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள். கணக்கெடுப்பு தரவுகள் கிடைத்த பிறகு அதற்கேற்ற சதவீத இடஒதுக்கீட்டை கொடுங்கள் என்று ஜெ குரு பாமக தலைமை நிலையச் செயலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார்.
Published : August 29, 2026 at 9:38 PM IST
சென்னை: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றால் அனைத்து வன்னியர் சமூக எம்எல்ஏக்களையும் அழைத்துச் சென்று சட்டசபையை முற்றுகையிடுவோம் என்று ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மனோஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "நாங்கள், ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சியை உருவாக்கி இருக்கிறோம். வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு கொடுத்தது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. ஆனால், இன்று வரை அமலுக்கு வரவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போதும் கோரிக்கை விடுத்தோம்; அமல்படுத்தவில்லை. தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழக அரசிடமும் 10.5% இட ஒடுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இது 40 ஆண்டு காலப் போராட்டம்.
இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றபோது முதலமைச்சர் விஜய் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் இதுகுறித்து பேச மறுக்கிறார். மாறாக பொதுப்பணித்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் பரப்புரையின்போது சமூகநீதிதான் எங்களது லட்சியம் என்று முதலமைச்சர் கூறினார். அனைத்து சமுதாய மக்களுக்கும் கிடைப்பதுதான் சமூக நீதி. ஆனால் எங்கள் சமுதாய மக்கள் 40 ஆண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.
முந்தைய கணக்கெடுப்பு அடிப்படையில் தான் இஸ்லாமியர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் உள்ஒதுக்கீடு கொடுத்தார்கள். அதே போல் வன்னியர்களுக்கு 10.5 % உள்ஒதுக்கீடு அமல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?
முதலமைச்சர் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் இட ஒதுக்கீடு தருவோம் என்று திமுக சொன்னது. அதுபோல தமிழக வெற்றி கழக அரசும் அதைத்தான் சொல்கிறது.
எனவே, முதலில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள். பிறகு தரவுகள் அதற்கேற்ற சதவீத இட ஒதுக்கீட்டை கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றால் நாங்கள் அனைத்து வன்னியர் சமூக எம்எல்ஏக்களையும் அழைத்துச் சென்று சட்டசபையை முற்றுகையிடுவோம்.
விருத்தாசலம் தொகுதியில் நின்று வெற்றி பிரேமலதா விஜயகாந்தும், முதல் முறையாக அமைச்சரான வன்னி அரசுவும், பாமக எம்எல்ஏக்கள் 4 பேரும் இதைப்பற்றி பேசவில்லை" என்று தெரிவித்தார்.