131 ஆண்டு வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் முதல் முறை.. இந்திய பவுலர் மானவ் சுதர் சாதனை
131 ஆண்டு வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் முதல் முறை.. இந்திய பவுலர் மானவ் சுதர் சாதனை
கார்டிஃப்: இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார், கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் வார்விக்ஷயர் அணிக்காக விளையாடி, கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கடந்த 131 ஆண்டுகளில் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்காக மானவ் சுதார் பந்துவீச அழைக்கப்பட்டார். இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வெறும் 15 பந்துகளை மட்டுமே வீசிய அவர், கூடுதல் ரன் எதையும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த மூன்று விக்கெட்டுகளுமே கிளீன் போல்ட் முறையில் வீழ்த்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் கூட தராமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரராக இங்கிலாந்தின் டாம் ஹேவர்ட் மட்டுமே இருந்தார். அவர் 1895 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்கு எதிராக லெய்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடியபோது வெறும் 6 பந்துகளில் இச்சாதனையை நிகழ்த்தினார். அவருக்குப் பிறகு, தற்போது 131 ஆண்டுகள் கழித்து மானவ் சுதார் தான் விளையாடிய ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இப்போட்டியில் வார்விக்ஷயர் அணி இன்னிங்ஸ் மற்றும் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 12 போட்டிகளில் 184 புள்ளிகளுடன் டிவிஷன் ஒன் தரவரிசையில் அந்த அணி தற்காலிகமாக முதலிடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியில் சுதாரின் பங்கு மிக முக்கியமானது. அவர் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 22.80 சராசரியுடன் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் பயணித்த மானவ் சுதார், அங்கிருந்து நேரடியாக கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட இங்கிலாந்து சென்றார். இந்திய அணியின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளரான அவருக்கு, இந்த கவுண்டி அனுபவம் வரவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான குளிர்கால சுற்றுப்பயணத்தில் பெரிதும் உதவியாக இருக்கும்.
வார்விக்ஷயர் அணியின் கேப்டன் எட் பார்னார்ட் தனது அணியையும், சுதாரின் வியக்கத்தக்க பந்துவீச்சையும் வெகுவாகப் பாராட்டினார். இதுகுறித்து பேசிய அவர், "போட்டி மிக விரைவாக முடிவுக்கு வந்தது வியப்பளிக்கிறது. நமது வீரர்கள் எவ்வளவு சிறப்பாக பந்துவீசினார்கள் என்பதை இது காட்டுகிறது.
களத்தில் எங்களின் பேட்ஸ்மேன்கள் சவாலான சூழ்நிலையைக் கடந்து ரன் குவிக்க நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தற்போது நாங்கள் முதலிடத்தில் இருப்பது உற்சாகமளிக்கிறது. எங்கள் அணியில் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளருடன் கூடிய வலுவான பந்துவீச்சு கூட்டணி உள்ளது. தற்போதைய நிலையில் நாங்கள் மிகவும் சாதகமான இடத்தில் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.