📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 03:33 AM

17

17

சென்னை, செப். 15–முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்லாட்சியில், தொன்மையான கோயில்களைப் பழமை மாறாமல் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 17–ந் தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.திருக்கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு இறுதியாக 8.4.2009 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு இக்கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுக்கு மராமத்து பணிகள் மேற்கொண்டு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அனைத்துத் திருப்பணிகளும் தொல்லியல் துறை வல்லுநர்களின் கருத்துரு, மதுரை மண்டல வல்லுநர் குழு, மாநில அளவிலான வல்லுநர் குழுவினரிடம் ஒப்புதல் பெறப்பட்டு திருக்கோயில் நிதி மூலம் 86 திருப்பணிகள் ரூ.15.40 கோடி மதிப்பீட்டிலும், உபயதாரர் நிதி மூலம் 100 திருப்பணிகள் ரூ.16.89 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.32.29 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை இத்திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிர்புறம் அமைந்துள்ள புதுமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு நுழைவு வாயிலில் தண்ணீர், பிஸ்கெட் உடன் கூடிய பிரசாதப்பை வழங்கப்பட உள்ளது. அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குடமுழுக்கினை காண வரும் பக்தர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய மருத்துவ உதவி மையங்கள் மற்றும் முகாம்கள் திருக்கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்ளுக்கு 108 அவசர ஊர்திகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் எல்.இ.டி. வண்ணத்திரைகள் பக்தர்கள் குடமுழுக்கினைக் காண்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் பரிவாரமூர்த்திகளுக்கான திருக்குடமுழுக்கு 16–ந் தேதி அன்று காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து 17–ந் தேதி அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் சமகாலக் குடமுழுக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் கலசாபிஷேகமும் நடைபெறவுள்ளது.இக்குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், கோயில் அறங்காவலர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.