‘27 முதல் 32 வயது வரைதான் ஃபார்மில் இருப்பார்கள் அதற்குள்..’ இளம் பவுலர் குறித்து பதான் குமுறல்
‘27 முதல் 32 வயது வரைதான் ஃபார்மில் இருப்பார்கள் அதற்குள்..’ இளம் பவுலர் குறித்து பதான் குமுறல்
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி புறக்கணிக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அணி கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அதற்கு அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக, இறுதிப் போட்டியில் கே.எல். ராகுல் போன்ற மூத்த வீரருக்கு எதிராக அவர் வீசிய பந்துகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
சமீபத்தில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இரண்டு 4 நாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனாலும், இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இது குறித்து பேசிய இர்ஃபான் பதான், "ஆகிப் நபி தேர்வு செய்யப்படாததற்கு என்னிடம் எந்த தர்க்கரீதியான பதிலும் இல்லை. தேர்வுக்குழுவின் அணுகுமுறை எனக்கு புரியவில்லை. ஜஸ்பிரித் பும்ரா இல்லாதபோது முகமது சிராஜ் தான் நமது முக்கிய பந்துவீச்சாளர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் வராத ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிராஜை விளையாட வைக்க வேண்டிய அவசியம் என்ன? உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு தருவது உண்மையானால், ஏன் ஆகிப் நபிக்கு அந்த போட்டியில் வாய்ப்பு தரவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், "வேகப்பந்து வீச்சாளர்கள் பொதுவாக 27 முதல் 32 வயது வரை தங்களின் சிறந்த ஃபார்மில் இருப்பார்கள். அந்த முக்கிய காலகட்டத்தில் அவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகளை வழங்காவிட்டால், அவர்களது திறமையை நாம் பயன்படுத்த முடியாமல் போய்விடும். சரன்ஷ் ஜெயின் போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்தது பாராட்டத்தக்கது. ஆனால், இதே அளவுகோல் ஏன் ஆகிப் நபிக்கு பயன்படுத்தப்படவில்லை? வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், கூடுதல் வீரராக இவரைத் தயார் செய்திருக்க வேண்டும்" என்று பதான் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.