📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 28, 2026 04:03 AM

29 சமூகநீதி பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் சம்பத் குமார் தகவல்

29 சமூகநீதி பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் சம்பத் குமார் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் வே.சம்பத் குமார் பேசியதாவது: பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு உள்பட 14 இடங்களில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கிவரும் 14 கல்லூரி மாணவ-மாணவிகள் சமூகநீதி விடுதிகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். ரூ.25.76 கோடி செலவில் 960 சமூகநீதி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர், ஃபிரிட்ஜ் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 29 சமூகநீதி பள்ளி விடுதிகள், கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்பட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு போதிய விடுதிவசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 517 சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் 28 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சிக்குத் தேவையான சீருடைகள், பயிற்சி பொருட்கள் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். சென்னையில் ரூ.54 லட்சம் செலவில் புதிய சமூகநீதி கல்லூரி மாணவிகள் விடுதி தொடங்கப்படும். இதில் 100 பேர் தங்கி படிக்கலாம்.

நலவாரியம் அமைக்கப்படும்: மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.3 கோடி செலவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அமைக்கப்படும். இதில் உறுப்பினர்களாகப் பதிவு செய்வோருக்கு பிற தொழிலாளர் நல வாரியங்களில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் போன்று உதவிகள் வழங்கப்படும்.

‘சூப்பர் கிளின், சூப்பர் கேம்பஸ்' திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்புஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத் தப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.