முந்தைய அரசின் இடர்பாடுகளை நீக்கினால் தமிழகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி திட்டங்கள்; அமைச்சர் ஆதவ்
சென்னை: முந்தைய ஆட்சியில் இருக்கும் இடர்பாடுகளை நீக்கினால், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் அனுமதியளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.
காட்பாடியில் மேம்பாலம் அமைத்து தரப்படுமா? என்ற கேள்விக்கு சட்டசபையில் அமைச்சர் ஆதவ் பதிலளித்து பேசினார். அவர் கூறியதாவது; காட்பாடி ரயில்நிலையம் அருகே உயர்மட்டப் பாலம் அமைக்க மத்திய அரசு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விழுப்புரம் - மங்களூரு சாலை 4 வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கு தேவையான நிலம் எடுப்பு பணிகள் முடிவுபெறும் நிலையில் உள்ளன.
தற்போது, ரூ.1,042 கோடி மதிப்பிலான நில எடுப்பு பணிகள் உள்பட இந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டங்கள் செயலாக்கப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைப்பணிகளின் தொய்வு குறித்தும், தமிழகத்திற்கு தேவையான மற்ற சாலைத்திட்டங்கள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை, கடந்த ஜூன் 2ம் தேதி நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
மாநில அரசு ஒத்துழைக்கும்பட்சத்தில் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், முந்தைய ஆட்சியில் இருக்கும் இடர்பாடுகளை நீக்கினால், வரும் காலங்களில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் அனுமதியளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். அதுமட்டுமில்லாமல், மத்திய சாலை நிதியில் இருந்து தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.500 கோடியை, முதல்முறையாக ரூ.1,000 கோடியாக உயர்த்தி அளித்துள்ளார். தமிழகத்திற்கு வழங்கப்படும் சாலை பாதுகாப்பு நிதி ரூ.300 கோடியில் இருந்து ரூ.600 கோடியாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.