📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 04:31 PM

30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ

30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ

90களில் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை மீனாட்சி சேஷாத்ரி, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1983-ம் ஆண்டு வெளியான ‘பெயிண்டர் பாபு’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மீனாட்சி சேஷாத்ரி, அதன் பின்னர் ‘ஹீரோ’, ‘தாமினி’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். இந்தி சினிமாவுடன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்த அவர், தனது அழகு, நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். தமிழில் பாக்யராஜுடன் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ மற்றும் நடிகர் பிரபுவுடன் ‘டூயட்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தனது சொந்த தயாரிப்பான ‘கதக்’ திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு “செரிஷ் டான்ஸ் ஸ்கூல்” என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். மேலும், அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு “மீனாக்ஷி அக்சப்ட் ஹர் விங்ஸ்” என்ற ஆவணப்படமும் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மும்பையில் குடியேறியுள்ள மீனாட்சி சேஷாத்ரி, பெரிய கதாபாத்திரமோ சிறிய கதாபாத்திரமோ என்ற பார்வையின்றி, ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வேடங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும், திரைப்படங்கள் மட்டுமின்றி ஓடிடி தொடர்களிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தனக்கென ஏஜென்ட் அல்லது பி.ஆர். நிறுவனம் எதுவும் இல்லாமல் தானே வாய்ப்புகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மீனாட்சி சேஷாத்ரியின் இந்த கம்பேக் அறிவிப்பு பழைய சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.