📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 23, 2026 12:01 PM

325 கோடி ரூபாய் சம்பளம்: இந்திய சினிமாவின் 'வசூல் மன்னனாக' மாறிய ரன்வீர் சிங்!

325 கோடி ரூபாய் சம்பளம்: இந்திய சினிமாவின் 'வசூல் மன்னனாக' மாறிய ரன்வீர் சிங்!

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் பெரும்பாலும் ரஜினிகாந்த் முதல் இடம்பெற்றிருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இதே கதை நீடித்தது. ஆனால், பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் இந்தக் கதை முற்றிலும் மாறியது. தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சிலர் ₹1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் மார்க்கெட்டை வைத்துள்ளனர். ஆனால் , தமிழ் சினிமா இன்னும் அந்தளவிற்கு மார்க்கெட் உயரத்தை தொடவில்லை.

₹1000 கோடி மார்க்கெட் இல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தேசிய அளவில் முன்னணியில் இருந்துள்ளது. ₹600 கோடி வசூலை குவித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் சம்பளமாக ரஜினிகாந்த் ₹250 கோடி வரை பெற்றதாக சில தகவல்கள் வெளிவந்தது. பாகுபலி திரைப்படங்களின் பெரிய வெற்றிக்கு பிறகு பிரபாஸின் சம்பளம் பெருமளவு உயர்ந்தது. 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் முதல் பாகத்திற்காக அவர் ₹200 கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 திரைப்பத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜுனனின் சம்பளமும் 200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' திரைப்படத்தின் சம்பளம் 300 கோடிக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. பாலிவுட்டை பொறுத்த வரையில் 2023 ஆம் ஆண்டு முதல் ஷாருக்கான் இந்த பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். 'பதான்' மற்றும் 'ஜவான்' திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் குவித்ததால் ஷாருக்கானின் சம்பளமும் உயர்ந்துள்ளது. அவர் ₹200 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் ரன்வீர் சிங்கும் இணைந்துள்ளார். இவர் நடித்த துரந்தர் திரைப்படம் மற்றும் அதன் 2 வது பாகம் ₹3000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் ரன்வீர் சிங் ₹325 கோடி ரூபாய் வரை வருவாய் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய சினிமாவிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கிய நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பாகிஸ்தானை உளவு பார்க்கும் உளவாளியின் வாழ்க்கையைப் அடிப்படையாகக் கொண்டது. வழக்கமாக உளவாளி திரைப்படங்கள் என்றாலே கதாநாயகன் கோட் சூட்டுடன் ஜேம்ஸ் பாண்ட் படம் போன்று போகிற போக்கில் எதிரிகளை வீழ்த்தி செல்வதைப் போலத் தான் காட்சியமைப்புகள் இருக்கும்.

துரந்தர் திரைப்படங்கள் இந்த காட்சி அமைப்பில் இருந்து மாறுபட்டது தான், அதன் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகன் அல்டிமேட் டிப் டாப்பாக இல்லாமல் நீண்ட முடி , பாரம்பரிய உடைகள் உள்ளூர் வாகனங்கள் என நம்பும்படியான காட்சிகளை எடுத்ததுதான், படத்தை ரசிகர்கள் கொண்டாட வைத்தது.

​இந்த படத்தில் ரன்வீர் சிங் தனி சம்பளமாக பெறாமல், படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை தனக்கு கிடைக்குமாறு ஒப்பந்தம் செய்திருந்தார். நிலையான சம்பளத்திலிருந்து இந்த நடைமுறை மாறுபடுவதால், தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தால் பெருமளவு பாதிப்படைவதில் இருந்து விடுபடுவார். அதேநேரம் திரைப்படத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் போது நடிகரும் லாபத்தில் ஒரு பங்கு பெறுவார். பொதுவாக தென்னிந்திய சினிமாவில் நடிகர்களின் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால், ஒரு படத்தின் தோல்வி அந்த தயாரிப்பாளரை முற்றிலும் நிலைகுலைய செய்து விடுகிறது.

படத்தின் வெற்றி தோல்விக்கு ஏற்ப சம்பளத்தை நிர்ணயம் செய்வது, அட்வான்ஸ் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு லாபத்தில் பங்கு வாங்குவது தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு காலத்தில் ஏராளமாக கடன் வாங்குவதிலிருந்து பெருமளவு விடுபட முடியும். ரன்வீர் சிங்கின் இந்த நடைமுறையை தமிழ் சினிமா நடிகர்கள் பின்பற்ற வேண்டும், என்று சமீப காலமாக தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.