மேகதாது விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- டில்லி சிறப்பு நிருபர் - மேகதாது வழக்கில், தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், அதற்காக திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்கும் வேலைகளில் அம்மாநில அரசு மும்முரமாக இறங்கி உள்ளது.

இந்த வரைவு அறிக்கைக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அதே போல, மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கக்கோரி, கர்நாடக அரசும் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், புதுச்சேரி, கேரள மாநில அரசுகளும் மேகதாது அணைக்கு எதிராக மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, 'கர்நாடகாவின் திட்ட வரைவு அறிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

'காவிரி விவகாரத்தில், நடுவர் மன்ற நிபுணர்களை கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது.

'எனவே, திட்ட வரைவு அறிக்கையின் மீது இந்த இரண்டு ஆணையங்களும் என்ன பரிந்துரைகளை வழங்குகிறதோ, அதன்படி தான் மத்திய நிர்வாக ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்; தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது' என கூறி, தமிழக அரசின் மனுவை 2025 நவம்பரில் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது.

'சீராய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். 2025 நவம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய போதுமான முகாந்திரம் இல்லை. எனவே, தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

சட்ட நடவடிக்கை: முதல்வர் உத்தரவு 'மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள், சட்ட வல்லுனர்களுடன், முதல்வர் விஜய் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என முதல்வரிடம் விளக்கினர். இதையடுத்து, இப்பிரச்னை தொடர்பாக விரைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், தலைமை செயலர் சாய்குமார், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு, பொதுப்பணித்துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டில்லியில் நடக்கிறது. இக்கூட்டத்தில், மேகதாது அணை பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பும்படி, தமிழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.