99 தமிழ் மலர்களின் பெயர்களை 31 விநாடிகளில் ஒப்புவித்து நெல்லை மாணவி உலகச் சாதனை
திருநெல்வேலி: சங்க காலத் தமிழ் இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள 99 வகையான தமிழ் மலர்களின் பெயர்களை 31 விநாடிகளில் அதிவேகமாகவும் பிழையின்றியும் ஒப்புவித்து நெல்லை மாணவி புதிய உலகச் சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு பயிலும் மாணவி தௌலத் இஸ்ரா.
இவருக்குத் தமிழ் மொழி மீதும், இலக்கியங்கள் மீதும் உள்ள பற்றின் காரணமாகச் சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள பூக்களின் பெயர்களை மனப்பாடம் செய்துள்ளார்.
கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பாரம்பரிய தமிழ் மலர்களின் பெயர்களைச் சற்றும் தடுமாற்றமின்றி 31 விநாடிகளில் அதிவேகமாக முழுமையாக ஒப்புவித்துக் காட்டியுள்ளார்.
தௌலத் இஸ்ராவின் இந்த அசாத்திய நினைவாற்றல், திறமையை ‘அமெரிக்கா உலக சாதனைப் புத்தகம்’ முறைப்படி பதிவு செய்து அங்கீகரித்துள்ளது.
மாணவி தௌலத் இஸ்ரா படிப்பில் மட்டுமின்றி, பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்குகிறார். ரூபிக்ஸ் கியூப்பை அதிவேகமாக மாற்றி அமைப்பது, கணிதம், அறிவியல் போட்டிகளில் வெல்வது என அசத்தி வருகிறார்.
இதுமட்டுமன்றி, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளான சிலம்பம், வில்வித்தையிலும் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
சிறுவயதிலேயே இதுவரை எட்டு உலகச் சாதனைகளையும் 15 கௌரவ விருதுகளையும் பெற்று நெல்லைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிறுமி தௌலத் இஸ்ராவின் இந்த உலகளாவிய சாதனையை திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) பிரசன்னகுமார் நேரில் பாராட்டினார்.
உலகச் சாதனை படைத்த இந்தச் சிறுமிக்குத் தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.