"ஆகாஷ் அம்பானி போன்.. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகணுமா என்று யோசித்தேன் ஆனால்"
"ஆகாஷ் அம்பானி போன்.. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகணுமா என்று யோசித்தேன் ஆனால்" - ரோஹித்
மும்பை: ஐபிஎல் 2027 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து, தனது 39 வயதில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோவில் மனம் திறந்து பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013 முதல் 2023 வரை கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, அந்த அணிக்கு 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். பின்னர் கேப்டன் பதவியை இழந்த அவர் மீண்டும் கேப்டன் ஆகி இருக்கிறார். இது பற்றி ரோஹித் சர்மா கூறுகையில், "கடந்த 2026 ஐபிஎல் சீசன் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக முடிந்தது. என்னை போலவே சக வீரர்களும் அணியின் தோல்விகளால் கடும் விரக்தியில் இருந்தனர். வீட்டிற்கு சென்றதும் அணியை எப்படி மீட்டெடுப்பது என என் மனைவியிடம் பேசினேன். அப்போது உரிமையாளர் ஆகாஷ் அம்பானி எனக்கு போன் செய்தார். நாங்கள் நேரில் சந்தித்து அணியை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து பல யோசனைகளை விவாதித்தோம்" என்றார்.
முதலில் கேப்டன் பதவியை ஏற்க தயங்கியதாக கூறிய ரோஹித், "ஆரம்பத்தில் மீண்டும் கேப்டனாக நான் தயாராக இல்லை என்பதுதான் என் மனதில் இருந்தது. ஏனெனில் கடந்த காலங்களில் நிறைய சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆனால் ஆழமாக யோசித்தபோது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது ஒரு சரியான வழிகாட்டுதலும் திசையும் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தேன். அந்த திசையை காட்டும் பொறுப்பை நான் செய்ய முடியும் என்றால், அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்ய முடிவெடுத்தேன்" என்று தெரிவித்தார்.
மேலும் அணியின் சரிவு குறித்து பேசிய ரோஹித், "2022ல் என் தலைமையில் கடைசி இடத்தில் முடித்தோம். தொடர்ந்து 2024 மற்றும் 2026 சீசன்களிலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்தோம். 3 சீசன்களாக கடைசி இடத்தில் இருப்பது மும்பை இந்தியன்ஸின் குணமே கிடையாது. ஆட்டத்தின் அணுகுமுறையிலும் திறமையிலும் நாம் பின்தங்கியிருந்தோம். இனி கடுமையாகப் போராடி பழைய வெற்றிகளை மீண்டும் கொண்டு வருவோம்" என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறினார். 2027 ஐபிஎல் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது.