ஒரு சமூகத்துக்கு ஆதரவாக கொலீஜியம் செயல்படுகிறது: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
புதுடில்லி: 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் அமைப்பின் செயல்பாடுகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
'பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது' என, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்பது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் ஆகியவற்றை பரிந்துரைக்கும் ஒரு முக்கிய அமைப்பு. இந்த அமைப்பு ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் எழுதிய கடிதம்: உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் சமீபத்திய பரிந்துரைகள், தகுதி மற்றும் சமூக உள்ளடக்கத்தை முழுமையாக புறக்கணித்துள்ளது.
மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு உள்ளது. பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சாராத பொதுப் பிரிவினர் நியமனங்களில் ஒதுக்கப்படுகின்றனர்.
கடந்த 2018 முதல் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட, 715 நீதிபதிகளில், 22 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவர், 16 பேர் பழங்குடியினர், 89 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 37 பேர் சிறுபான்மையினர் என மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், 75 சதவீத நியமனங்கள் பொதுப் பிரிவினருக்கே வழங்கப்பட்டுள்ளது. 2021 முதல் தற்போது வரை, இது 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, சிறிய உயர் நீதிமன்றத்தில் இருந்து பெரிய உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கடினமாக உழைக்கும் நேர்மையான தலைமை நீதிபதி ஒருவர் சிறிய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தண்டனை நடவடிக்கையாக தாய் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட ஒரு நீதிபதிக்கு, பின், பெரிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 124(2)ன் கீழ் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. கொலீஜியம் அமைப்பு பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டதல்ல, நீதித்துறையில் அனைத்து தரப்பினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய ஜனாதிபதி உடனே தலையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.