📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health November 28, 2026 12:01 PM

டிக்டாக் இணையத்தளத்தில் உணவுப்பொருள் முன்பதிவு மோசடி

டிக்டாக் இணையத்தளத்தில் உணவுப்பொருள் முன்பதிவு மோசடி

இணையத்தில் உணவுப் பொருள்களை எளிமையாக முன்பதிவு செய்ய விரும்பிய இருவருக்கு அதுவே மிக மோசமான விளைவை ஏற்படுத்திவிட்டது.

அவ்வாறு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) அதற்கான முன்பதிவுகளைச் செய்த பிறகு அவர்களின் கட்டண அட்டை விவரங்களை ஒருவர் பயன்படுத்தி பல பரிவர்த்தனைகளைச் செய்து ஏறத்தாழ $19,000க்கும் மேற்பட்ட இழப்பை ஏற்படுத்திவிட்டார்.

அக்குற்றங்களைப் புரிந்த 21 வயது ஆடவர் அன்றைய தினமே கைதுசெய்யப்பட்டு அவர்மீது சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சம்பவ நாளன்று காவல்துறைக்கு பிற்பகல் 3.20 மணியளவிலும் 4.25 மணியளவிலும் இரு வேறு நபர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன. புகாரின்படி இணையத்தில் உள்ள ‘டிக்டாக் ஷாப்’ எனப்படும் பொருள்கள் வாங்கும் பகுதியில் உணவு வகைகளை இருவரும் முன்பதிவு செய்தனர்.

அப்போது அதற்குமுன் அறியப்படாத மாற்று இணையப்பக்கத்துக்கு அவர்கள் இட்டுச் செல்லப்பட்டு அங்கு வங்கிக் கட்டண அட்டை விவரங்களைத் தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதன்பிறகு அங் மோ கியோ அவென்யு 8, பீப்பள்ஸ் பார்க் காம்ப்ளெக்ஸ் இடங்களில் உள்ள நகைக் கடைகளில் மொத்தம் $19,322.90 மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பதிவுசெய்யப்பட்டன.

பிடோக் காவல் நிலைய அதிகாரிகள், கண்காணிப்புக் புகைப்படக் கருவிகளின் உதவியுடன் மேற்கொண்ட உடனடி விசாரணையில், பரிவர்த்தனைகளைச் செய்த ஆடவரை அடையாளம் கண்டனர்.

கூட்டுச் சதியில் மோசடி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை, பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.