📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 05, 2026 10:02 PM

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ட்விஸ்ட்... முக்கிய அதிகாரி கைது.. திமுகவிற்கு குடைச்சலா?

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ட்விஸ்ட்... முக்கிய அதிகாரி கைது.. திமுகவிற்கு குடைச்சலா?

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ட்விஸ்ட்... முக்கிய அதிகாரி கைது.. திமுகவிற்கு குடைச்சலா?

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் முஹமது புகாரி கைது செய்யப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கவைத்துவிடுவேன் என மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், சென்னை பரங்கிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றிய முஹமது புகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த முஹமது புகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற அதிகாரியாக பரவலாக அறியப்பட்டவர். இந்நிலையில், அவர் மீது சௌகார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் குமார் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உங்களையும் தொடர்புபடுத்தி கைது செய்ய முடியும். அதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் பணம் கொடுக்க வேண்டும்" என்று கூறி, முஹமது புகாரி தன்னை மிரட்டியதாகவும், அதன் பின்னர் பல கட்டங்களாக ரூ.40 லட்சம் வரை பெற்றுக் கொண்டதாகவும் அனில் குமார் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட நடவடிக்கையாக முஹமது புகாரி பரங்கிமலை காவல் நிலையப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று இரவு கூடுதல் காவல் உயரதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தொழிலதிபரிடம் இருந்து பணம் பெற்றதற்கான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முஹமது புகாரி மீது மிரட்டல் மற்றும் பணம் பறித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த முஹமது புகாரி, பின்னர் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியவர். தற்போது லஞ்சம் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.