📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 30, 2026 06:04 PM

ஆந்திராவில் சோகம்: 3 வயது குழந்தையை பாலத்தின் மீது தவிக்கவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த தம்பதி!

ஆந்திராவில் சோகம்: 3 வயது குழந்தையை பாலத்தின் மீது தவிக்கவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த தம்பதி!

ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு தங்களின் 3 வயது ஆண் குழந்தையை பாலத்தின் மீது தனியாக தவிக்கவிட்டு, பெற்றோர் இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்த செய்தி நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அரங்கேறியுள்ளது.

நள்ளிரவில் நடந்த பயங்கரம்

வேல்புரூ கிராமத்தைச் சேர்ந்த தொட்டா சாய் (29) மற்றும் அவரது மனைவி சிரீஷா (28) ஆகிய இருவரும், வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் தங்களது 3 வயது குழந்தையுடன் ஸ்கூட்டரில் சின்சினாடா பாலத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு யாரும் எதிர்பாராத விதமாக, குழந்தையை ஸ்கூட்டரிலேயே அமரவைத்துவிட்டு, இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர்.

"அம்மா... அப்பா..." - கதறிய குழந்தை

இருள் சூழ்ந்த, கடுமையான குளிரில் அந்தப் பிஞ்சு குழந்தை பாலத்தின் மீது தனியாக நின்றுகொண்டிருந்தது.

தெலுங்கில் "அம்மா... அப்பா " என்று அழுதுகொண்டே கத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், குழந்தை தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு அவர்களது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

தீவிர தேடுதல் வேட்டை

அண்மையில் பெய்த மழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், ஆற்றில் குதித்த தம்பதியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டாலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் படகு குழுவினர் இணைந்து ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காரணம் என்ன?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தொட்டா சாய், வளைகுடா நாட்டிற்குச் சென்றுவிட்டு சமீபத்தில்தான் ஆந்திரா திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அவர் கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர்கள் தங்களது வீட்டை விற்க முடிவெடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், தற்கொலை முயற்சிக்கான முழுமையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.