மூத்த அமைச்சர் லீயின் சமர்கண்ட் பயணம்
சமர்கண்ட், உஸ்பெகிஸ்தான்: மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உஸ்பெகிஸ்தானின் பழங்காலப் பட்டுப்பாதை நகரமான சமர்கண்டிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட்டதுடன் அவ்வட்டார ஆளுநரையும் திரு லீ சந்தித்துப் பேசினார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டிலிருந்து ரயில் மூலம் சமர்கண்ட் சென்றடைந்த மூத்த அமைச்சர் லீயை, சமர்கண்ட் ஆளுநர் அதிஸ் போபோயேவ், துணை ஆளுநர் ருஸ்தாம் கோபிலோவ் ஆகியோர் வரவேற்றனர்.
மத்திய ஆசியாவின் ஆகப் பழைமையான நகரங்களில் ஒன்றான சமர்கண்ட், பல நூற்றாண்டுகளாகப் பட்டுப்பாதையின் முக்கிய நகரமாக விளங்கியது. ஆசியா முழுவதும் அதற்கு அப்பாலும் இருந்த வர்த்தகர்கள், சுற்றுப்பயணிகள், கல்விமான்கள் அங்குச் சந்திப்பது வழக்கம்.
ஆளுநருடனான சந்திப்பின்போது, இருதரப்புப் பொருளியல், முதலீடு, சுற்றுலாத்துறை சாத்தியக்கூறுகள் குறித்து மூத்த அமைச்சர் லீ கலந்துரையாடினார். சிங்கப்பூர் நிறுவனங்கள் சமர்கண்டின் வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள், வர்த்தகம், இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அச்சந்திப்பில் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் திரு லீ, சமர்கண்ட் நகரம் செழுமையான கலாசார, சமய, வரலாற்றுத் தலம் என்றும் அதன் சுற்றுப்பயணத் துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் இமாம் அல்-புகாரியின் நினைவிடம், புகழ்பெற்ற ரீகிஸ்தான் சதுக்கம், சியொப் சந்தை, 14ஆம் நூற்றாண்டு மன்னர் அமீர் திமூரின் நினைவிடம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமைச்சர் லீ பார்வையிட்டார்.
முன்னதாக, இருநாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கான முதற்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியதுடன், பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மூன்று ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டன.
எட்டு நாள் மத்திய ஆசியப் பயணம் மேற்கொண்டுள்ள மூத்த அமைச்சர் லீ, முதல் மூன்று நாள்கள் கஸக்ஸ்தான் சென்றிருந்தார். அதையடுத்து ஆகஸ்ட் 27ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார். ஆகஸ்ட் 31ஆம் தேதி அவரது முதல் மத்திய ஆசியப் பயணம் நிறைவுபெறும்.