📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 03, 2026 04:32 AM

 ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

 ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: 'தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணிநேரத்தில், நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் அதிகபட்சமாக, 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது.

அதேசமயம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில், இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரித்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், அதிகபட்சமாக, 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

வட உள்கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதி வரை, தென் உள்கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும், தெற்கு குஜராத்தில் இருந்து கேரளா வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது.

இதனால், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிதமான மழை பெய்யலாம்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.