📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 27, 2026 10:04 AM

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம் - ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு

1.5 கிலோ மீட்டருக்கு 60 ரூபாயும், மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 30 ரூபாயும், நிர்ணயிக்க வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Published : August 26, 2026 at 7:41 PM IST

சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு குறித்து போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியாகாவிட்டால் மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் குறித்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ் பாலசுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானமும் உயரவில்லை. பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

தற்போது 14 ஆம் ஆண்டும் தொடங்கியுள்ளது. விலைவாசிக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்ததால், மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி, ஆன்லைன் அபராதம் என்ற பெயரால் ஆட்டோ தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.

மேலும், 1.5 கிலோ மீட்டருக்கு 60 ரூபாயும், மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 30 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். காத்திருப்பு கட்டணம் மற்றும் இரவு நேர பயணம் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் அமைச்சரிடம் மனுக்களும் வழங்கப்பட்டன.

அனைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் சந்தித்து மனுக்களை கொடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 லட்சம் குடும்பத்தினர் ஆட்டோ தொழிலை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு, டூவீலர் பைக் டாக்ஸியை முறைப்படுத்த வேண்டும், முறைப்படுத்துவதற்கு முன்பாக தற்போதுள்ள சட்டத்தின்படி தடை செய்ய வேண்டும். இது குறித்து மனுக்களை போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் கொண்டு சென்றுள்ளோம்.

வரும் 28ஆம் தேதி நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கைகளில், இது குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் அனைத்து சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.