📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 11, 2026 07:33 AM

அஜித் களமிறங்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.. லண்டனில் முக்கிய நிகழ்வு

அஜித் களமிறங்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.. லண்டனில் முக்கிய நிகழ்வு

அஜித் களமிறங்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.. லண்டனில் முக்கிய நிகழ்வு

லண்டன்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித்குமார் களமிறங்கும் நிலையில், அந்தப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். லெ மான்ஸ் கோப்பை நிர்வாகம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்திக்கவும், தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஜோசப் விஜய் இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். வரும் செப்டம்பர் 16 வரை அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்த பயணத்தின் இடையே, சில்வர்ஸ்டோனில் இந்த வார இறுதியில் நடைபெறும் 2026-ம் ஆண்டுக்கான லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தின் 5-வது சுற்றில் முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இதில் பங்கேற்கும் இந்திய கார் பந்தய ஓட்டுநர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்குமார், அஜித் ரெட்ஆன்ட் அணிக்காக எல்எம்பி3 புரோ/ஆம் பிரிவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து போட்டியிடுகிறார். மேலும், இந்தியாவின் முன்னாள் பார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் இதே அணிக்காகக் களமிறங்குகின்றனர்.

முன்னதாக, தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இந்த சிறப்பான திட்டத்தை வரவேற்று நடிகர் அஜித் குமார் அப்போது நன்றி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனில் ஒரே நிகழ்வில் இவர்கள் இருவரும் சந்திப்பது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.