செரீனாவின் சாதனையை சமன் செய்த சபலென்கா.. அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு
செரீனாவின் சாதனையை சமன் செய்த சபலென்கா.. அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு
நியூயார்க்: நியூயார்க்கில் நடைபெற்று வரும் 2026 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா அபார வெற்றி பெற்று தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸின் வரலாற்று சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இந்த அரையிறுதி ஆட்டத்தில், பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் பெகுலாவை வீழ்த்தி வெறும் 80 நிமிடங்களில் வெற்றியை உறுதி செய்தார். இப்போட்டியில் சபலென்கா 7 ஏஸ்களையும், 29 வின்னர்களையும் விளாசி மிரட்டினார்.
இதற்கு முன்பு செரீனா வில்லியம்ஸ் 2011 முதல் 2014 வரை தொடர்ந்து 4 முறை அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அந்த மாபெரும் சாதனையை தற்போது சபலென்கா சமன் செய்துள்ளதுடன், நியூயார்க்கில் தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்கும் வாய்ப்பையும் நெருங்கியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டி மற்றும் பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் தோல்வியடைந்ததுடன், உலகின் நம்பர் 1 தரவரிசையையும் சபலென்கா இழந்திருந்தார். இதனால் இந்த அமெரிக்க ஓபன் தொடரில் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அவர் களமிறங்கி அசத்தி வருகிறார்.
வரும் இறுதிப்போட்டியில் புதிய நம்பர் 1 வீராங்கனையான எலினா ரைபாகினா அல்லது அமெரிக்காவின் கோகோ காஃப் ஆகிய இருவரில் ஒருவரை சபலென்கா எதிர்கொள்ள உள்ளார். கடந்த 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமாவது வென்று வரும் சபலென்கா, தனது அந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.