📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news July 25, 2026 07:34 PM

அமைச்சர்கள் அறையில் ரீல்ஸ்: த.வெ.க.,வினரால் போலீசார் அதிர்ச்சி

அமைச்சர்கள் அறையில் ரீல்ஸ்: த.வெ.க.,வினரால் போலீசார் அதிர்ச்சி

சென்னை: தலைமைச் செயலகம் மற்றும் அமைச்சர்களின் அறைகளுக்குள் சென்று, 'ரீல்ஸ்' எடுக்கும் த.வெ.க.,வினரால், பாதுகாப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழக அரசு, கடந்த மே 10ம் தேதி பதவியேற்றது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க, தமிழகம் முழுதும் இருந்து, பலரும் தலைமைச் செயலகம் வருகின்றனர். இதனால், அங்கு நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதனால், பாதுகாப்பு கெடுபிடிகளை போலீசார் அதிகரித்துள்ளனர். மூன்று 'ஷிப்ட்' அடிப் படையில், போலீசார் 24 மணி நேரமும், தலைமைச் செயலக நுழைவாயிலில் பணிபுரிந்து வருகின்றனர்.

தலைமைச் செயலகத்திற்கு உள்ளே செல்வோரிடம், அதற்கான காரணம் பெறப்படுகிறது. யாரை சந்திக்க வேண்டும்; அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு, பதில்கள் பெறப்படுகின்றன.

உரிய ஆவணங்களுடன் வருவோர் மட்டுமே, தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அமைச்சர்களை சந்திக்க அனுமதி பெற்று வரும் த.வெ.க.,வினர், தலைமைச் செயலகத்தை சுற்றி, 'வீடியோ' பதிவு செய்து வருகின்றனர்.

சிலர் ஆர்வ கோளாறில், நுழைவாயிலில் தொடங்கி, அமைச்சரை சந்திப்பது வரை, வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டு வருகின்றனர். எந்தெந்த பகுதிகள் வழியாக செல்லலாம் என, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில், கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அறைக்கு சென்றதையும், அவரை சந்தித்ததையும், இளம்பெண் ஒருவர் 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர்கள், துறை செயலர்கள் செல்லும், வி.ஐ.பி., லிப்டில் அவர் பயணித்து, அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்துவதும் வீடியோவாக வெளியானது; இது போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைமைச் செயலகம் உள்ளே எடுக்கப்படும் வீடியோ, சமூக விரோதிகளின் கைகளுக்கு செல்லக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, இதுபோல் வீடியோ எடுப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.