📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 25, 2026 08:06 AM

அம்பயர்களின் முடிவால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா.. க்ளவுஸை வீசி எறிந்து டிரஸ்ஸிங் ரூமில் கோபம்

அம்பயர்களின் முடிவால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா.. க்ளவுஸை வீசி எறிந்து டிரஸ்ஸிங் ரூமில் கோபம்

அம்பயர்களின் முடிவால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா.. க்ளவுஸை வீசி எறிந்து டிரஸ்ஸிங் ரூமில் கோபம்

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், மங்கலான வெளிச்சம் இருந்த போது ஆட்டத்தைத் தொடர அம்பயர்கள் அனுமதித்ததால் இலங்கை அணி வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, ஆட்டத்தின் கடைசிப் பந்தில் விக்கெட்டை இழந்த பிரபாத் ஜெயசூர்யா டிரஸ்ஸிங் ரூமிற்குச் சென்று தனது க்ளவுஸ்-ஐ வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்.

கொழும்பில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த போது இந்தச் சர்ச்சை அரங்கேறியது. மைதானத்தில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்று இலங்கை பேட்ஸ்மேன்களான கமில் மிஷாரா மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் அம்பயர்களிடம் முறையிட்டனர். ஆனால் கள அம்பயர்களான அஹ்சன் ரசா மற்றும் ஷர்புத்துல்லா சைகத் ஆகியோர் வெளிச்சத்தை அளவிட்டு விட்டு, இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினால் ஆட்டத்தைத் தொடரலாம் என தெரிவித்தனர்.

இதை அடுத்து இந்திய கேப்டன் சுப்மன் கில், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதரை பந்துவீச அழைத்தார். பந்துவீசத் தயாரான போது இலங்கை பேட்ஸ்மேன்கள் தங்களது அதிருப்தியைத் தொடர்ந்து வெளிப்படுத்தினர். இந்நிலையில், ஆட்டத்தின் கடைசிப் பந்தில் மானவ் சுதர் வீசிய சுழலில் சிக்கிய நைட்வாட்ச்மேன் பிரபாத் ஜெயசூர்யா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அம்பயர்களின் முடிவால் அதிருப்தி அடைந்த ஜெயசூர்யா, மைதானத்தில் இருந்து வெளியேறும் போது தொடர்ந்து அம்பயர்களை முறைத்துப் பார்த்தபடியே சென்றார். டிரஸ்ஸிங் ரூமிற்குச் சென்றவுடன் தனது க்ளவுஸை கோபத்துடன் வீசியெறிந்தார். வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "பிரபாத் ஜெயசூர்யாவின் காதுகளில் இருந்து புகை வரும் அளவுக்கு அவர் கடும் கோபத்தில் உள்ளார்" என்று விவரித்தார். ஜெயசூர்யா அவுட் ஆன அதே பந்தோடு அன்றைய நாள் ஆட்டம் மங்கலான வெளிச்சம் காரணமாக அதிகாரப்பூர்வமாக முடிக்கப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் துருவ் ஜூரல் 115 ரன்கள் மற்றும் தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினர். மேலும் கேப்டன் சுப்மன் கில் 50 ரன்களும், ரிஷப் பண்ட் 63 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் பந்துவீச்சில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போதைய நிலையில் இலங்கை அணி, இந்தியாவை விட 495 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.